கரிம வெளிப்பாட்டைக் குறைக்கும் வேளையில், பருவநிலை மாற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்: ஜனில்

கரிம வெளிப்பாட்டைக் குறைக்கும் வேளையில், பருவநிலை மாற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்: ஜனில்

2 mins read
b9e3c8f9-548c-43e4-a8d2-a6b179a52d1e
இரண்டாவது சிங்கப்பூர் பசுமை உரையாடலில் பங்கேற்ற நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (இடது), சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வுக் கழகத்தின் தலைவர் சைமன் டே. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகள் அதிக சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தழுவிக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமை (பிப்ரவரி 11) அன்று தெரிவித்தார்.

“அனைத்துலக அளவில் நடைபெற்று வரும் மாற்றங்கள், அதனால் உருவாகும் அதிர்வுகள், நிச்சயமின்மை ஆகியவை சிறிய தடுமாற்றம் அல்ல. ஒரு சுழற்சியால் மாறிப்போகும் ஒன்றுமல்ல. இது நிரந்தரமான, கட்டமைப்பு ரீதியான மாற்றமாகும்,” என்று டாக்டர் ஜனில் விவரித்தார்.

சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்த இரண்டாவது சிங்கப்பூர் பசுமை உரையாடலில் உரையாற்றிய அவர், “கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் முழுமையாகப் பயன் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது,” என்று அவர் கூறினார்.

“எங்கள் உயிர்வாழ்வுக்கும் தாங்கும் திறனுக்கும் எது அவசியம்? நாம் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்த தீவு நாடாக இருக்கிறோம். நமது நாட்டின் 30 விழுக்காட்டுப் பகுதியில் சுமார் ஒரு மீட்டர் முதல் ஐந்து மீட்டர் வரை கடல் மட்ட உயர்வின் பாதிப்புக்கு உட்படக்கூடியது,” என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார். மேலும், உணவு, ஆற்றல், நீர் தேவைகளுக்காக சிங்கப்பூர் வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் விநியோகச் சங்கிலிகள், உற்பத்தியாளர்கள், பங்காளிகள் எதிர்கொள்ளும் அனைத்து அபாயங்களும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

நிச்சயமற்ற உலகச் சூழலில், சிங்கப்பூர் தனது பருவநிலை உறுதிப்பாடுகளை எவ்வாறு நிலைநிறுத்த முடியும் என்பது குறித்து, சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வுக் கழகத் தலைவர் சைமன் டேயுடன் நடைபெற்ற உரையாடலில் அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், சிங்கப்பூர் பல தகவமைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் தேசிய வெப்ப அலை மறுமொழித் திட்டம், திடீர் வெள்ளத்திற்குத் தயாராகும் பிரசாரங்கள், கடலோரப் பாதுகாப்புக்கான மிகவும் பொருத்தமான வடிவங்களைக் கண்டறிய தொடர்ச்சியான ஆய்வுகள் ஆகியவை அடங்கும்.

“முன்கூட்டியே மாற்றியமைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யும் நாடுகள், வட்டாரங்கள், நிறுவனங்கள் மேலும் தாங்கக்கூடிய திறன் பெற்றவையாக மாறும். அவை அதிகத் தயார்நிலையையும் பெறும். இறுதியில், அபாயம் கூடுதல் மதிப்போ அல்லது தாங்கும் திறன் கூடுதல் மதிப்போ கணக்கில் கொள்ளப்படும்,” என்று டாக்டர் ஜனில் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்