சிங்கப்பூர் நீதிமன்றங்களில் பாலியல் வழக்கு விசாரணையில் சாட்சிக் கூண்டு சம்பந்தப்பட்டோரை இழிவுபடுத்துவதற்கான இடம் அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதி வின்சென்ட் ஹூங் எடுத்துரைத்துள்ளார்.
குறுக்கு விசாரணையின்போது அது தொடர்பான கேள்விகளுக்கு சிங்கப்பூர் நீதிமன்றங்களில் இடம் கிடையாது என்று அவர் வலியுறுத்தினார்.
அரசு நீதிமன்றங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நீதிபதியுமான திரு ஹூங், “நீதிமன்றம் ஒரு போர்க்களம் அல்ல என்பதையும் சாட்சிக் கூண்டு இழிவுபடுத்துவதற்கான ஒன்று இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
“இழிவுபடுத்தியோ சாட்சியின் மனநல பலவீனத்தைத் தவறாகப் பயன்படுத்தியோ வாக்குமூலம் பெறுவதில் எந்தப் பெருமையும் கிடையாது,” என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் சட்டக் கழக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.
இம்மாதம் இரண்டாம் தேதி நடந்த அந்நிகழ்ச்சியில் திரு ஹூங் ஆற்றிய முக்கிய உரை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது அதில் சம்பந்தப்படுவோர் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பது குறித்து சிங்கப்பூரின் நீதித்துறை அண்மைக் காலமாக வழக்கறிஞர் வட்டத்துக்கு நினைவூட்டி வருகிறது. அந்த வகையில், பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும்போது கருத்தில்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்த திரு ஹூங்கின் உரை இடம்பெற்றுள்ளது.
பாலியல் வழக்குகளின் விசாரணையைக் கையாளும்போது அவற்றை நன்கு வழிநடத்திக் கூடுதல் பொறுப்புடன் செயல்படுமாறு தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார். புகார் அளித்தோர் ஆதாரங்களை முன்வைப்பதைக் கையாள்வதும் அதில் அடங்கும்.

