தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடலுறுதியை ஊக்குவிக்கும் மெதுநடை ஓட்ட நிகழ்ச்சி

2 mins read
b5654d8a-b72e-4264-ae4a-5b54bdfcfb09
அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லிலிருந்து தொடங்கிய மெதுநடை ஓட்டத்தைத் துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ் ஒலியெழுப்பித் தொடங்கி வைத்தார். - படம்: லாவண்யா வீரராகவன்

செட்டியார் கோவில் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மெதுநடை ஓட்ட நிகழ்ச்சி, செப்டம்பர் 28ஆம் தேதி டேங்க் ரோட்­டில் உள்ள அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லிலிருந்து தொடங்கியது.

ஏறத்தாழ 600 பேர் பங்கேற்ற மெதுநடை ஓட்ட நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசுதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

காலை ஏழு மணியளவில் டாக்டர் சரவணன் வழிநடத்திய ஆயத்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து ஐந்து கிலோமீட்டர் மெதுநடை ஓட்டம் மேற்கொண்டனர் பங்கேற்பாளர்கள்.

“ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிப்பதில் எங்கள் பங்காக மெதுநடை ஓட்ட நிகழ்ச்சியை நடத்துவதில் மகிழ்ச்சி,” என்றார் செட்டியார் கோவில் குழுமத் தலைவர் காசி சுப்ரமணியம்.

தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதாகவும் தாம் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதன்முறையாக நிகழ்ச்சியை நடத்துவது பெருமையளிப்பதாகவும் சொன்னார்.

தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், சிறப்பு விருந்தினர் தினேஷ் வாசுதாஸ், செட்டியார் கோவில் குழுமத் தலைவர் காசி சுப்ரமணியம் (இடமிருந்து ஆறாவது), கோவில் குழும உறுப்பினர்கள்.
தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், சிறப்பு விருந்தினர் தினேஷ் வாசுதாஸ், செட்டியார் கோவில் குழுமத் தலைவர் காசி சுப்ரமணியம் (இடமிருந்து ஆறாவது), கோவில் குழும உறுப்பினர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

இந்நிகழ்ச்சியின் தொடர்பில் ஆண்டுதோறும் பயனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டும் எட்டுப் பேருக்கு அவரவர் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

“சமயப்பணிகளுடன் பல்வேறு வகையில் சமூகப்பணிகளையும் செட்டியார் கோவில் குழுமம் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் உதவி தேவைப்படுவோர்க்கு ஆதரவளிக்கும் நோக்கில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன,” என்று சொன்னார் காசி சுப்ரமணியம்.

ஆக அதிக எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இவ்வாண்டு வழங்கப்பட்டதாகக் குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த ஐந்தாண்டுகளாகச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நிலையில் உள்ள உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர் ராமசுந்தரம், 77, இவ்வாண்டு சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டார். “சற்றுப் பழுதடைந்த நிலையில் உள்ள சக்கர நாற்காலியை நான் பயன்படுத்துகிறேன். இது எனது பராமரிப்பாளருக்கும் சிரமமளிப்பதை உணர்ந்ததால் புதிய சக்கர நாற்காலிக்கு விண்ணப்பித்தேன். கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்று சொன்னார் ராமசுந்தரம்.

ஐந்து கிலோமீட்டர் மெதுநடை ஓட்டத்தில் வழிகாட்டும் பணியில் ஈடுபட்ட தியாகு அழகப்பன், 46, “பங்கேற்பாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றதைக் காணமுடிந்தது. காலை வேளையில் அனைவரும் கூடி நடப்பதைப் பார்ப்பதே நல்ல அனுபவம்,” என்றார்.

இந்த மெதுநடை ஓட்ட நிகழ்ச்சி தொடங்கிய 2000ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து பங்கேற்று வருபவர் வள்ளியம்மை லக்‌ஷ்மணன், 59. “குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இங்கு வந்து பலரைச் சந்தித்துப் பேசவும், அனைவருடன் இணைந்து ஓட்டத்தில் ஈடுபடுவதும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்