ஏடிஸ் கொசுக்களுக்கு எதிராக கடந்த 2016ல் தொடங்கப்பட்ட ‘வோல்பாக்கியா’ திட்டம் தற்போது 10ஆம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. ஆய்வுக்கூடங்களில் கொசுக்களை உற்பத்தி செய்து அவற்றைக் குடியிருப்புகளில் விடுவிப்பது திட்டத்தின் செயல்முறை.
ஆரம்பத்தில் சிறிய அளவில் மூன்று இடங்களில் சோதிக்கப்பட்ட வோல்பாக்கியா திட்டம் நாடு முழுவதும் தற்போது 840,000 குடியிருப்புகளை எட்டியுள்ளது. அது இங்குள்ள மொத்த வீடமைப்பு வட்டாரங்களில் 53 விழுக்காடாகும்.
அத்திட்டத்தின் வளர்ச்சியை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி அதன் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் விவரித்தார்.
கல்வி மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஜனில், சனிக்கிழமை (அக்டோபர் 31) கலந்துகொண்ட அந்நிகழ்வு, நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடந்தது.
வோல்பாக்கியா திட்டம் செயல்படுத்தப்பட்ட வட்டாரங்களில் கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் குடியிருப்பாளர்களுக்கு டெங்கித் தொற்று ஏற்படும் அபாயம் 70 விழுக்காடுவரை குறைந்தது எனவும் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் தகவல் வெளியிடப்பட்டது.
திட்டம் விரிவடைந்த நிலையில் சிங்கப்பூரில் டெங்கித் தொற்று குறைந்துள்ளது. ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் 2025ஆம் ஆண்டு 4,036 நபர்களுக்கு டெங்கி நோய் பதிவுசெய்யப்பட்டது. அது 2024ஆம் ஆண்டில் இருந்த 13,651 என்ற எண்ணிக்கையை விட 70 விழுக்காடு குறைவாகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜனில், வோல்பாக்கியா திட்டம் ஓர் உடனடித் தீர்வாகாது என்று எச்சரித்தார். டெங்கிக்கு எதிரான போராட்டம் அனைவரும் பகிரவேண்டிய பொறுப்பாகும் என்று விளக்கினார். நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து இல்லங்களையும் அக்கம்பக்கத்தையும் கொசுக்கள் இன்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வோல்பாககியா திட்டப்படி, ஆண் கொசுக்கள் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்டு ‘வோல்பாக்கியா’ கிருமியை ஏந்தி அவை விடப்படும் குடியிருப்புகளுக்குச் செல்கின்றன.
அங்கு அவை அப்பகுதிகளில் பெண் கொசுக்களுடன் விடப்படும்போது இனப்பெருக்க நடவடிக்கை இடம்பெறும். பிறகு பெண் கொசுக்களால் முட்டைகள் இட முடியாமல் போகும். அதன்பயனால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
