சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிபோலத் தம்மைக் காட்டிக்கொள்ளும் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 34 வயது மலேசியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்ட அவரிடமிருந்து காவல்துறையினர் இரண்டு தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
அவரையும் சேர்த்து, கடந்த மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்குத் துணைபோன சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 26ஆவது மலேசியர் என்று காவல்துறை புதன்கிழமை (மே 20) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மோசடியில் சிக்கிய ஒருவரிடமிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புகார் பெறப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
தம்மை ஒரு காவல்துறை அதிகாரி என்று தெரிவித்து அழைத்த பெண், பண மோசடி நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்துவதாக மோசடியில் சிக்கியவரிடம் கூறியுள்ளார்.
விசாரணைக்காக வங்கிக் கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து அதனை சொந்த நகைகளுடன் சேர்த்து, தாம் அனுப்பும் முகவரிடம் ஒப்படைக்குமாறும் அந்த மர்மப் பெண் கூறியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
அதற்கு இணங்கி, $13,700 ரொக்கப் பணத்தையும் நகைகளையும் 34 வயது மலேசியப் பெண்ணிடம் கோவன் அருகே கொடுத்ததாக புகாரில் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் அந்தப் பெண் சிக்கினார்.

