ரிவர் வேலி ரோட்டிலிருந்த கட்டடம் ஒன்றுக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு ஒரு மணி நேர ‘பிலாட்டேஸ்’ உடற்பயிற்சி வகுப்புக்குச் சென்ற மாது, திரும்பி வந்து பார்த்தபோது அவரின் கார் முடக்கப்பட்டிருந்தது.
காரை விடுவிக்க $400 செலுத்த வேண்டுமெனக் கூறும் துண்டுச்சீட்டை ‘சியாப் சுவான் பில்டிங்கின்’ நிர்வாக அலுவலகம் அந்த காரில் செருகியிருந்தது.
இச்சம்பவம் மே 24ஆம் தேதி நடந்ததாக திருவாட்டி ஓங் கூறினார். சட்டவிரோதமாக காரை நிறுத்தியதால் அதை முடக்கியதாக கட்டட நிர்வாகம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
காரின் பின் சக்கரம் கார் நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதைத் தடுப்பின்மேல் ஏறிய நிலையில் காணப்பட்டதால் அது சட்டவிரோதம் என்று கூறப்பட்டது.
திருவாட்டி ஓங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்த படத்தில் அந்த காரின் இடப்புற பின் சக்கரம் லேசாக கார் நிறுத்துமிடத்தைக் காட்டும் கோட்டைத் தொட்டவண்ணம் இருந்தது.
பேரப்பேச்சு ஏதும் நடத்தாமல் நிர்வாகம் அபராதம் விதித்ததாக அவர் கூறினார். பின்னர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டதாகவும் அவர்களின் ஆலோசனைப்படி அபராதத்தை முதலில் செலுத்திவிட்டு பின்னர் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்ததாகவும் திருவாட்டி ஓங் கூறினார்.
கட்டட நிர்வாக அலுவலகத்தின் பிரதிநிதி இதுகுறித்து மன்றக் கூட்டத்தில் பேசியபின் தகவல் தருவதாகக் கூறியதாகவும் ஆனால் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் அவர் சொன்னார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டபோது அந்தப் பிரதிநிதி பதிலுரைக்கவில்லை.


