வார இறுதிப் பயணமாக உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியே மலேசியா செல்வோர் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மலேசியப் பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் பாதையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 31) காலை 10.44 மணி அளவில் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக் கருவிகளை நண்பகல் 12 மணிக்கு ஆய்வுசெய்தபோது, உட்லண்ட்ஸ் கிராசிங் வரை நீண்ட வாகன வரிசை காணப்பட்டது. மேலும், புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிய மேம்பாலப் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
வாகன ஓட்டுநர்கள் காலதாமதத்தை எதிர்பார்க்கலாம் என்றும் தங்களது பயணத்தைத் தொடங்குவதற்குமுன் போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சிங்கப்பூரின் தரைவழிச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மதித்து, ஆணைய அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் பள்ளி விடுமுறையின்போது, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக ஓட்டுநர்கள் 27 பேர் பிடிபட்டனர். அவர்களில் 16 பேர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் போக்குவரத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வெளியேறும் பாதைகளில் இரட்டை வெள்ளைக் கோடுகளைக் கடப்பது, சட்டவிரோதமாக வலப்புறம் திரும்புவது, ஆபத்து அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவது, வரிசையை முந்திச் செல்வது போன்றவை ஓட்டுநர்கள் இழைத்த குற்றங்களில் அடங்கும்.
