உட்லண்ட்சில் ஜனவரி 23ஆம் தேதி இரவு, 32 வயது மாது ஓட்டிச்சென்ற கார் காவல்துறை வாகனத்தின் மீது மோதியதில் அவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 3க்கும் உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த விபத்து குறித்து இரவு 7.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
காயமடைந்த மாது, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நினைவுடன் இருந்ததாகவும் விசாரணையில் அவர் உதவிவருவதாகவும் கூறப்பட்டது.
விபத்து தொடர்பில் சிங்கப்பூர் ரோட் ஆக்சிடென்ட்.காம் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 24ஆம் தேதி பதிவேற்றப்பட்ட காணொளியில் சாலையில் இரு வாகனங்களுக்கும் இடையில் பொருள்கள் சிதறிக் கிடப்பதைக் காணமுடிந்தது.
காவல்துறை வாகனத்தின் இடப்பக்கத்தில் கீறல்களும் பள்ளங்களும் ஏற்பட்டிருந்தன. மாது சென்ற காரின் முன்பக்கம் நசுங்கி, வளைந்து காணப்பட்டது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.