தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சமூகங்களுக்கிடையே புரிதலை ஒருங்கிணைக்கும் வலிமையான பாலம் மொழிபெயர்ப்பு’

2 mins read
5be4e12c-882b-40ba-891b-c76ed9111395
திரு. ச. வடிவழகன். - படம்: திரு. வடிவழகன்.

சமூகங்களுக்கிடையே நிலவும் ஒருமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள, அவற்றுக்கு இடையே உள்ள புரிதலை ஒருங்கிணைக்க மொழிபெயர்ப்பு வலிமைமிகு பாலமாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார் திரு ச.வடிவழகன்.

அண்மையில் நிறைவுபெற்ற தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கருத்தரங்கு அமர்வில் உரையாற்றிய திரு வடி, அதுகுறித்த கருத்துகளை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

நடிகர், எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறனுடன் மிளிரும் திரு வடி, நம்முடைய சரித்திரங்களைப் பிற சமூகத்தினரும் அறிய வேண்டும் என்று விரும்பியதால் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டதாகக் கூறினார்.

“சிங்கப்பூரில் இருமொழிக்கல்வி என்பது சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்க்கப்பட்ட ஒன்று. எனவே தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது நான் கொண்ட கடப்பாடு.

“சில வேளை ஆங்கிலப் புத்தகம் படிக்கும்போது அவற்றில் காணப்படும் கருத்துகளையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் தமிழிலும் கொடுக்க வேண்டும்; நம் சமூகத்துடன் பகிர வேண்டும் என்றெழுந்த வேட்கையின் விளைவாக ஆரம்பித்ததுதான் மொழிபெயர்ப்பு,” என்று கூறினார் திரு வடி.

இங்குள்ள இளையர்களுக்கு மொழிபெயர்ப்பு பல்வேறு துறைகளிலும் பயன்பெற உதவியாக இருக்கும் என்றார் திரு வடி.

“உதாரணமாகத் திருக்குறளின் சிறப்பை ஆங்கிலத்தில் பகிர்ந்துகொள்ளும்போது நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அதன் விழுமியங்கள், மொழிப்புலமை அல்லாதோரை, குறிப்பாக இளையர்களையும் சென்றடையும். இருமொழித்திறனுடன் இளைஞர்கள் மிளிரும்போது, வேலை, வாழ்க்கை என ஒவ்வொரு சூழலிலும் அவர்களுக்கு அது நல்ல பலன்களைத் தந்து முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் அளிக்கும்,” என்பது தம் நம்பிக்கை என்று தெரிவித்தார் திரு வடி.

இணையத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் சில நேரங்களில் பிழையுடன் இருப்பதைக் காண்பது வருத்தமாக இருக்கும் என்ற அவர், சிறப்பான மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது தமிழின் அழகை மொழிபெயர்ப்பாளர்கள் காட்சிப்படுத்தி எழுதிய விதம் தம்மைக் கவரத் தவறியதில்லை என்றார்.

“ஒவ்வொரு சூழலிலும் நாம் நம்முடன் வாழ்ந்துவரும் பிற சமூகத்துடன் இணைந்து இருக்க வேண்டும். அவ்வகையில் மற்றவர்களின் பாரம்பரியங்களை நாம் புரிந்துகொள்ளும்போது, குறிப்பாக இளையர்கள் அதனை அறிந்துணரும்போது, வாழ்க்கை இன்னும் எளிதாகிறது,” என்றார் திரு வடி.

ஒவ்வொரு சமூகத்தையும் பற்றி சரியான தகவல்களை எதிர்காலத் தலைமுறையினருக்குத் துல்லியமாகக் கொண்டுசேர்ப்பதில் மொழிப்பெயர்ப்பாளரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அவர், மொழிபெயர்ப்புக் களத்திற்கு ஆக்ககரமான செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) அறிமுகத்தைப் பற்றியும் பேசினார்.

“‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் நேரடி மொழிபெயர்ப்பு செய்ய இயலும். என்றாலும் அப்படைப்புகளில் உள்ள மனித உணர்வுகள், சொற்களின் நுட்ப வேறுபாடுகளைத் தொழில்நுட்பம் ஈடு செய்யாது. அது மொழிப்பெயர்ப்பாளராலேயே சாத்தியமாகும்,” என்று கூறினார் இந்தப் பன்மொழிக் கலைஞர்.

குறிப்புச் சொற்கள்