சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் சரிந்து வரும் சூழலில் திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றுக்கான மறு-ஆய்வுப் பணிக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கையில் வேலை வாழ்க்கை சமநிலை, கல்வி சார்ந்த மனவுளைச்சலைக் குறைப்பதற்கான பரிந்துரைகள் இடம்பெறும் எனப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற டிபிஎஸ் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்த மறுஆய்வு முற்போக்கான வேலையிட நடைமுறைகளை உருவாக்குவதையும் கருவுறுதல், தாய்மை நலன் ஆகியவற்றை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்டு செயல்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றுக்கான மறு-ஆய்வுப் பணிக்குழுவின் தலைவரான அவர், ‘காம்லிங்க் பிளஸ்’ திட்டம் மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களின் சமூக, நிதி மீள்திறனை வலுப்படுத்த டிபிஎஸ் அறக்கட்டளையும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து தாய்மார்களின் சத்துணவு, மனநலம், நிதி சார்ந்த அறிவு தொடர்பான பயிற்சிகளையும் டிபிஎஸ் அறக்கட்டளை வழங்கி வருகிறது.
அத்தகைய உதவிகள் குடும்பங்களின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி, அவர்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் எனக் குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
தேசிய மக்கள்தொகை, திறன் பிரிவின் ஆதரவுடன் செயல்படும் திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றுக்கான மறு-ஆய்வுப் பணிக்குழு, பிள்ளை வளர்ப்புத் தொடர்பான செலவு, பராமரிப்பு, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது.
அதற்கான முழுமையான அறிக்கை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் அதிவேகமாக மூப்படையும் சமூகமாக மாறிவரும் சூழலில், வலுவான பிணைப்புகள், கற்றல் திறன், பரந்த பராமரிப்பு வட்டம் ஆகிய மூன்று அடிப்படைகள் அவசியம் எனக் கூறிய அமைச்சர், அரசாங்கம், முதலாளிகள், வர்த்தகங்கள் ஆகியவை இணைந்து குடும்பங்களுக்கான ஆதரவுச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
