சின் மெங்கில் கட்டப்படும் வீவகவின் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் (பிடிஓ) கட்டுமானத் தளத்தில் ஒரு பாரந்தூக்கி சனிக்கிழமை (அக்டோபர் 10) மாலை நேரத்தில் கவிழ்ந்து உடைந்தது.
பணியிடத்தில் பயன்பாடு முடிவடைந்து அதன் பாகங்கள் கழற்றப்பட்டன. அவ்வாறு அகற்றப்படும் நிலையில் பாரந்தூக்கி கவிழ்ந்ததால் அதன் ஏற்றத்தைத் இறுக்கப் பிடித்திருந்த பாகம் விழுந்து கண்காணிப்புப் பணியில் இருந்த 37 வயது ஊழியர் ஒருவர் மீது பட்டு அவர் காயமடைந்தார்.
எண் 28, சின் மெங் ஸ்திரீட் முகவரியில் அமைந்துள்ள கட்டுமானத் தளத்தில் நேர்ந்த விபத்து குறித்து மாலை 5.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மனிதவள அமைச்சின் பேச்சாளர், பாரந்தூக்கி கழற்றப்படும் வேளையில் அதனை மேற்பார்வையிட ஊழியர் அருகில் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்தார்.
காயமடைந்த ஊழியர் டான் தோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனைக் கூட்டாகத் தெரிவித்த வீவகவும் மனிதவள அமைச்சும் காயம் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. விசாரணை தொடர்கிறது.
கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து ஊழியரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்யவிருப்பதாக வீவக கூறியுள்ளது.