கட்டுமானத் துறையில் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான ஐந்து வேலையிட உயிரிழப்புகள், ஆண்டின் பிற்பாதியில் 15ஆக மும்மடங்காகின.
இந்நிலையில், கட்டுமானத் துறையில் வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் தொடர்பான செயல்முறை ‘கவலைக்குரியதாக உள்ளது’ என்று மனிதவள அமைச்சு டிசம்பர் 13ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது அல்லது அவற்றைப் பின்பற்றாதது, வேலையிட விபத்துகளில் ஏற்பட்ட பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அது சுட்டியது.
“வேலையிடப் பாதுகாப்பு தொடர்பில் மெத்தனப் போக்குடன் உரிமை எடுத்துக்கொள்ளாத ஒரு நிலை நிலவுவதாகத் தெரிகிறது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி பங்ளாதேஷைச் சேர்ந்த 27 வயது ஊழியர் ஒருவரது உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார் என்று நம்பப்படுகிறது. இந்தச் சம்பவத்தோடு மேலும் மூன்று அண்மைய வேலையிட விபத்துகள் குறித்து விசாரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கட்டுமானத் துறை சம்பந்தப்பட்ட அம்மூன்று சம்பவங்களிலும் உயிரிழப்பு அல்லது மோசமான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 13ஆம் தேதி காலையில் சிங்கப்பூரரான 77 வயது ஆடவர் பளுதூக்கியை இயக்கிக்கொண்டிருந்தபோது அதன் கொக்கிப் பகுதி பெயர்ந்து ஆடவரது இடது பாதம்மீது விழுந்தது.
நொவினா ரைஸ், தோ பாயோ ரைஸ் இரண்டுக்கும் இடையே உள்ள வடக்கு-தெற்கு ரயில் பாதைக்கான கட்டுமானத் தளத்தில் நேர்ந்த இவ்விபத்தைக் காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன.
சிதைந்த இடது பாதத்தோடு ரத்தம் தோய்ந்த, நரைமுடி கொண்ட ஆடவர் ஒருவர் பளுதூக்கியிலிருந்து வெளியேற முயல்வதைப் படங்கள் காட்டுகின்றன.
காயமடைந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் அமலாக்கப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக மனிதவள அமைச்சு அதன் பதிவில் குறிப்பிட்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் 400க்கும் மேற்பட்ட சோதனைகளை அது மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேலையை உடனடியாக நிறுத்துமாறு 13 தரப்புகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்களுக்கு மொத்தம் $300,000க்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.