உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடப்பிதழ்: சிங்கப்பூர் முதலிடம்

1 mins read
fca6196a-9863-4399-95a4-07b9feeca356
சிங்கப்பூர்க் கடப்பிதழைக் கொண்டு 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம் அல்லது சென்றடைந்ததும் விசா பெறலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏறத்தாழ 190 இடங்களுக்குமேல் விசா இன்றி செல்லக்கூடிய வசதியைப் பெற்றுள்ள சிங்கப்பூரின் கடப்பிதழ் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்ற தரநிலையை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

‘ஹென்லி’ கடப்பிதழ்க் குறியீடு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியிட்ட இவ்வாண்டுக்கான தரப்பட்டியலில் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றடைந்தவுடன் விசா பெறக்கூடியதாகச் சிங்கப்பூர் கடப்பிதழ் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானும் தென்கொரியாவும் இரண்டாம் நிலையில் வந்தன. அவற்றின் கடப்பிதழ்களைக் கொண்டு 188 இடங்களுக்கு விசா இன்றிச் செல்லமுடியும்.

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் கடப்பிதழ்களைக் கொண்டு 186 இடங்களுக்குச் செல்லமுடியும் என்பதால் அவை கூட்டாக மூன்றாம் இடத்தைப் பிடித்தன.

நான்காம் இடத்தில் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் போர்ச்சுகலும் ஐந்தாம் இடத்தைப் பிடித்தன.

போலந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது நியூசிலாந்து.

பிரிட்டன், ஆஸ்திரேலியாவுடன் ஏழாம் நிலையை மேலும் மூன்று ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது.

ஐஸ்லாந்து உட்பட பட்டியலில் இரு ஐரோப்பிய நாடுகளுடன் எட்டாம் நிலையில் கனடா இருக்கிறது.

ஆசியாவைப் பொறுத்தமட்டில், மலேசியா ஒன்பதாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதன் கடப்பிதழைக் கொண்டு 180 இடங்களுக்குச் செல்ல முடியும். அமெரிக்கக் கடப்பிதழ் பத்தாம் நிலையில் உள்ளது.

கொசோவோவுடன் இணைந்து சீனா 59ஆம் நிலையிலும், இந்தியா 77ஆம் இடத்திலும் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்