ஷாங்காய்: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, 26 வயதான ஆர்தர் லியு உலகில் ஆகப் பெரிய அளவில் நடத்தப்படும் இளையோருக்கான தொழில்நுட்பத் திறன் போட்டியில் தனிச்சிறப்புக்கான விருதைப் பெற்றார்.
‘மெக்கட்ரானிக்ஸ்’ என்ற தொழில்நுட்பத்துறையில் அவர் 2019ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கஸான் நகரில் போட்டியிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து அவர் சீனாவின் ஷாங்காய் நகருக்கு இம்மாதம் 23ஆம் தேதி ஓர் உன்னதக் காரணத்துக்காகப் பயணம் மேற்கொண்டார்.
அன்றைய தினம் அந்நகரில் உலகத் திறன் போட்டிகள் தொடங்கின. சிங்கப்பூரிலிருந்து அங்கு சென்று போட்டியில் கலந்துகொண்டுள்ள இளையோருக்கு ஆதரவு நல்கும் நோக்கத்துடன் அவர் சொந்தச் செலவில் பணியிடத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுள்ளது கவனத்துக்குரியது.
சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக்கழகக் கல்லூரிகளில் (ஐடிஇ) இருந்தும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) இருந்தும் 34 மாணவர்கள் ஷாங்காயின் தேசிய கண்காட்சி மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) வரை நான்கு நாள்கள் நடைபெறும் போட்டிகளில் 31 பிரிவுகள் உள்ளன. சிங்கப்பூரைப் பிரதிநிதித்துச் சென்றுள்ள மாணவர்கள் உள்ளூர், வட்டார அளவில் நடந்த பற்பல திறன் போட்டிகளில் வென்றவர்கள் ஆவர்.
அவர்களுக்கு ஆதரவு நல்கிட 30 சிங்கப்பூரர்கள் அங்கு சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவரான திரு லியு, போட்டித் தளங்களுக்கு நேரில் சென்று சிங்கப்பூர் மாணவர்களுக்கு அவரது அறிவுரைகளையும் வழிகாட்டலையும் வழங்கவுள்ளார்.
போட்டியாளர்களில் 21 வயதுடைய பிரென்டன் யாப், செட்ரிக் யாவ் போன்ற இருவருக்கு போட்டித் தளத்தை ஏற்றபடி அமைப்பதோடு மனதளவில் தயாராகும் உத்திகளையும் அவர் பகிர்ந்துகொள்ளவார்.
“இயந்திரங்களைப் பொருத்துவதில் பிரெண்டனுக்கு தன்னம்பிக்கைக் குறைபாடு சிறிதளவு உள்ளது. அதிகம் சிந்திக்காமல் செயல்படு என்று அவரிடம் கூறுவேன்,” என்று திரு லியு தெரிவித்தார்.
இதற்கிடையே பகுதி மின்கடத்தித் துறையில், ‘அப்ளைட் மடீரியல்ஸ்’ எனப்படும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கு உலகத் திறன் போட்டி முக்கியக் காரணம் என்று திரு லியு குறிப்பிட்டார். பெருநிறுவனங்களில் ஒன்றான ‘மைக்ரோன்’ போன்றவற்றுக்கு பகுதி மின்கடத்திகளை அவரது நிறுவனம் உற்பத்தி செய்து விற்கிறது. அவற்றின் தரத்தை உறுதி செய்வது திரு லியுவின் கடமைகளில் ஒன்றாகும்.
தொழில்நுட்பப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள திரு லியு, அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகு 2025ல் முழுநேரமாக இணைய முடிவெடுத்தார். உலகத் திறன் போட்டியில் அவர் பெற்ற நேரடி அனுபவம் அவரது நிறுவனத்தாரை வெகுவாகக் கவர்ந்திருந்தது என்று அவர் தெரிவித்தார்.
