எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீதான வழக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விசாரணைக்கு வரும் என்று மே 31ஆம் தேதி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் பொய்யுரைத்ததாக 47 வயதாகும் திரு சிங் மீது கடந்த மார்ச் 19ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் ரயீசா கான் வழக்கு தொடர்பில் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் அவர் அவ்வாறு பொய்யுரைத்தாகக் கூறப்பட்டது.
திரு சிங் மீதான வழக்கு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டது.
மேல்விவரங்களுக்குத் திரு சிங்கின் வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமபோயை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
முன்னதாக, 2021 நவம்பர் 1ஆம் தேதி திருவாட்டி ரயீசா கான், காவல்துறை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஒன்றைத் தவறாகக் கையாண்டதாக நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் 2021 நவம்பர் 30ஆம் தேதி அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
இவ்வழக்கு தொடர்பில் திரு சிங், பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவர் ஃபைஸல் மனாப் இருவரிடமும் அரசாங்க வழக்கறிஞர் மேல்விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற விசாரணைக் குழு பரிந்துரைத்தது. நாடாளுமன்றம் அதை அங்கீகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதைத் தொடர்ந்து, 2021 டிசம்பர் 10, 15 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் கேள்விகளுக்குத் திரு சிங் பொய்யான பதில்களைத் தந்ததாகக் கூறப்பட்டது.
திரு ஃபைஸல் நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் இருப்பினும் அதன் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப் போவதில்லை என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் காவல்துறையும் மார்ச் 19ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் கேள்விகளுக்குப் பொய்யான பதில்களைக் கூறுவது குற்றமாகும். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7,000 வெள்ளி வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.