பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்ட அக்கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் குற்றவாளி என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 17) வெளிவந்த தீர்ப்புக்குப் பிறகு அக்கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, இதுகுறித்து கருத்துரைத்துள்ள அக்கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம், “பாட்டாளிக் கட்சிக்கு சவால்கள் புதிதல்ல,” என்று கூறியிருக்கிறார்.
கடந்த காலங்களில் பலமுறை சவால்களைச் சமாளித்தது போன்றே இம்முறையும் இந்தச் சூழலை எதிர்கொண்டு மீண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருவாட்டி சில்வியா லிம்.
கட்சியுடன் எல்லா நேரங்களிலும் துணைநின்ற அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாக சொன்ன திருவாட்டி லிம், “சிங்கப்பூரர்களின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயலுவோம்,” என்றும் கூறினார்.
பிரித்தம் சிங் வழக்கிலான தீர்ப்பு திங்கட்கிழமை (பிப்ரவரி 17) பிற்பகல் வழங்கப்பட்ட நிலையில் அவரின் தந்தையும் முன்னாள் துணை அரசுத் தரப்பு வழக்கறிஞருமான திரு அமர்ஜித் சிங், தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்திற்கு சிங்குடன் வந்திருந்தார்.
மேலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டென்னிஸ் டான், ஜெரல்ட் கியாம், செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிங்கிற்கு ஆதரவு தருவதற்காக நீதிமன்றத்திற்கு வருகையளித்திருந்தனர்.
பிரித்தம் சிங் வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதி லியூக் டான், அக்கட்சியின் சில்வியா லிம் மற்றும் ஃபைசல் மனாப் ஆகியோர் திருவாட்டி ரயீசாவுக்கு உதவ எதுவும் செய்யாததைச் சுட்டினார். மேலும் தற்காப்புத் தரப்புக்கு அவ்விரு தலைவர்களையும் சாட்சியங்களாக அழைக்கும் வாய்ப்பிருந்தும் அவர்கள் அழைக்கவில்லை. மாறாக உரிமைக் குழுவின் சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முயன்றதாகக் குறிப்பிட்டார். புறவாசல் வழி நுழையும் இம்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது அன்று என்றும் நீதிபதி டான் தீர்ப்பின்போது கூறினார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் குற்றவியல் குற்றச்சாட்டின் தொடர்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தம் சிங்.
இத்தீர்ப்பு சிங்கின் அரசியல் எதிர்காலத்திற்கு பின்னடைவாக இருக்குமா, அவரது அரசியல் வாழ்க்கைக்கும் பாதகமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த சிங், “நான் ஜோசியக்காரன் அல்ல, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். வாக்குப்பதிவு நாளில் நீங்கள் அந்தக் கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்கலாம்,” என்றார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய சிங்கப்பூரில் குற்றவியல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சி அரசியல்வாதி மறைந்த ஜே.பி. ஜெயரத்னம் ஆவார். முன்னாள் பாட்டாளிக் கட்சியின் தலைவரான அவருக்கு 1986ஆம் ஆண்டு சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.