சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 70 விழுக்காட்டுக்கும் அதிகமான இளையர்கள் பொருள், சேவைகளை ‘முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும்’ (BNPL) முறையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
பரிவர்த்தனைகளைக் கையாளும் நிறுவனமான வோர்ல்ட்பே (Worldpay) வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
‘ஜென் ஸீ’ (Gen Z) என்றழைக்கப்படும் வயதுப் பிரிவைச் சேர்ந்த இளையர்களுக்கு இது பொருந்தும். பொதுவாக 1997லிருந்து 2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தோர் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
‘முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை’யை உபயோகிக்கும் பயனீட்டார்களில் பெரும்பாலோர் 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் என்ற தகவல் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ரோஷி (ROSHI) சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்தது. நிதியைக் கையாளும் விதத்தில் அடுத்த தலைமுறையினர் மாறுபடுவதை அது குறிப்பதாகக் கருதப்படுகிறது.
மாதச் சம்பளத்தை நம்பியிருப்பதால் இளையர்கள் பணத்தை சீரான முறையில் செலவிட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்; அந்த வகையில், ‘முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை’க்கான செயலிகள் அவர்களுக்குக் கைகொடுப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வர்த்தகப் பள்ளியின் உத்தி, கொள்கைக்கான பேராசிரியர் லாரன்ஸ் லோ குறிப்பிட்டார்.
கடன் அட்டைகளைவிட ‘முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை’யைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு 70 விழுக்காடு அதிகமாகப் பதிவானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பணம் செலவழிக்கப்படும் போக்கில் முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
‘முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை’ வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022லிருந்து 2027க்கு இடைப்பட்ட காலத்தில் அம்முறை, பொருளியலில் வகிக்கும் பங்கு மூன்று விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘முதலில் வாங்கி பின்னர் கட்டணம் செலுத்தும் முறை’யைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; 2022ஆம் ஆண்டுக்குள் அதை உபயோகிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 1.9 மில்லினுக்கு உயரும் என்று ரோஷி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் அந்த முறைக்கான மதிப்பு 2022ல் 1.2 பில்லியன் டாலராகப் (1.62 பில்லியன் வெள்ளி) பதிவானது. 2032ஆம் ஆண்டுக்குள் அதன் மதிப்பு 3.7 பில்லியன் டாலருக்கு உயரும் என்றும் ரோஷியின் அறிக்கையில் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

