தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, ஜோர்தான் ஆயுதப் படையின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் யூசெஃப் அல்-ஹுனைட்டுடன் ஜோர்தானிய தலைநகர் அம்மானில் சந்திப்பு நடத்தினார்.
வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேதி காலை நடந்த அந்தச் சந்திப்பில், காஸாவுக்கான மனிதாபிமான முயற்சிகள், வட்டாரத்தில் பாதுகாப்பு நிலைமை, புவிசார் அரசியல் நிகழ்வுகளில் ஆதரவளிக்க இரு நாட்டுப் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான கூடுதல் ஒத்துழைப்புக் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர்.
காஸாவுக்கான மனிதாபிமான உதவித் தொகுப்பை கைமாற்ற சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு ஜோர்தான் ஆதரவளித்து உதவியதற்கும் திரு ஸாக்கி நன்றி தெரிவித்தார்.
திரு ஸாக்கியின் ஜோர்தான் பயணம் இரு நாட்டு ராணுவப் படைகளுக்கும் இடையிலான நட்புரீதியான தற்காப்பு உறவை கோடிட்டுக் காட்டுவதாக தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பிப்ரவரி 12, 13 தேதிகளில் ஜோர்தான் சென்றிருந்த திரு ஸாக்கி ஜோர்தான் ஹஷிமைட் அறப்பணி அமைப்பின் தலைமையகத்துக்கும் மன்னர் ஹுசேன் புற்றுநோய் நிலையத்துக்கும் சென்றார்.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ ஆதரவு போன்ற கூடுதல் உதவிகளை வழங்குவதற்கான வழிகள் குறித்து ஹஷிமைட் அறப்பணி அமைப்புடன் ஸாக்கி பேசினார்.
புற்றுநோய் நிலைய நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் நிலையத்துடன் அவர் கலந்துரையாடினார் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
காஸாவுக்கு ஒன்பது டன் மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக திரு ஸாக்கி ஜோர்தான் சென்றிருந்தார். பிப்ரவரி 12 அன்று சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானத்தில் அம்மானுக்குச் சென்றது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் காஸாவிற்கான அந்த ஏழாவது நிவாரணத் தொகுப்பில், சுகாதார அமைச்சும் அரசு சாரா அமைப்புகளும் வழங்கிய மருத்துவ, உணவு மற்றும் சுகாதார பொருள்கள் இடம்பெற்றிருந்தன.

