கடமைக்கு முதலிடம் அளிக்கும் வீரர்கள்

நாட்டுக்காகச் சேவை ஆற்றும் நோக்கில் வெளிநாடு சென்றுள்ள நம் படை வீரர்கள் இருவர் வெளிநாட்டில் தங்களின் தீபாவளி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் கொண்டாட்டம்

இரண்டரை ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவின் ராக்ஹாம்ப்டன் நகரத்தில் பணியாற்ற அனுப்பப்பட்ட திருமால் அய்யாறு, மனைவி மற்றும் மகளுடன் அங்கு சென்றார்.

வேலை தொடர்பில் ஒருநாள் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த 56 வயது திருமாலுக்கு ஆசை நிறைவேறியது. இதுவரை அவர் அங்கு இரண்டு முறை தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

திருமால் தம்முடைய 27 வயது மூத்த மகன் ரவீனை விட்டுப் பிரிந்து ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

தீபாவளி வந்துவிட்டாலே பரபரப்புடன் காணப்படும் இக்குடும்பம், இன்று அமைதியான முறையில் நெருங்கிய நண்பர்களுடன் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

தேக்காவுக்குச் செல்வது, உறவினர்களுடன் ஒன்றுகூடி பலகாரங்கள் செய்வது போன்ற அம்சங்களை பெரிதாக ஏங்கும் திருமாலும் அவரது மனைவி சாந்தாவும், இன்று அவர்களின் ஆஸ்திரேலியா வீட்டில் பலகாரங்களை செய்து, வீட்டை அலங்கரித்து, புத்தாடை அணிந்துகொண்டு, சிங்கப்பூரில் இருக்கும் உறவினர்களைத் தொடர்புகொண்டு பண்டிகை உணர்வில் திளைக்கின்றனர்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் ராணுவ வல்லுநராக உள்ள திருமால், 1982ல் ராணுவத்தில் சேர்ந்தார். இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெறவிருக்கும் இவர், 2021ல் மகன் இவர்களுடன் ஆஸ்திரேலியாவில் தீபாவளி கொண்டாட வந்ததை நினைவுகூர்ந்தார்.

மகனுக்கு சிங்கப்பூரில் இருக்கும் நகர்ப்புற வாழ்க்கை அதிகம் பிடித்துள்ளதாகக் கூறிய அவர், “ரவீன் சிங்கப்பூரில் தனியாக இருப்பது கவலையாக இருந்தாலும், அவர் பிறரைச் சாராமல் வாழக் கற்றுக்கொள்ளலாம்,” என்றார்.

திருமாலுடன் ஆஸ்திரேலியாவுக்கு கூடவே வந்திருந்த சக ஊழியர்களை திருமாலும் அவரின் மனைவியும் இன்று பண்டிகைக்கு உணவருந்த அழைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் புதிய ராணுவ வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் திருமால், ஆஸ்திரேலியாவில் கண்காணிப்பு, பயிற்சி அளித்தல், ராணுவப் பயிற்சிக்கு சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா வரும் ராணுவ வீரர்களைத் தயார்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்.

இவர்களின் 21 வயதாகும் மகள் சசிகலா ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி சிகிச்சைத் துறையில் (பிசியோதெரபி) பயின்று வருகிறார். மீண்டும் சிங்கப்பூர் திரும்பும்போது மகளை ஆஸ்திரேலியாவில் விட்டு வரும் எண்ணத்தில் இருக்கும் திருமாலும் அவரது மனைவியும், “என்னதான் ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை சிங்கப்பூரை ஒப்பிடுகையில் பரபரப்பு அல்லாமல் இருந்தாலும் சிங்கப்பூரில் இருக்கும் உணவு வகைகள், சிறப்பான போக்குவரத்துச் சேவை, பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் போன்றவற்றுக்கு வேறு எந்த நாடும் ஈடாகாது,” என்று கூறினர்.

வெளிநாட்டில் தனிமையில் கொண்டாட்டம்

குடும்பத்தை விட்டுத் தனியே தீபாவளி கொண்டாடுவது ராமசாமி சுப்பையாவுக்குப் புதிதல்ல. தீபாவளி ஒரு வழக்கமான பொது விடுமுறைதான் தவிர தனியாக இருப்பதால் அது பெரிதளவில் தனக்குக் கொண்டாட்ட உணர்வை அளிக்கவில்லை என்றார் சிங்கப்பூர் கடல் படையில் கடற்படைப் போர்த்திறக் கட்டமைப்பு பொறியாளரான ராமசாமி, 37.

முன்பு வேலை பயிற்சிக்காக பல நாடுகளுக்குச் சென்றுள்ள ராமசாமி, தற்போது ஸ்வீடனின் குளிர் காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். அங்குள்ள கார்ல்ஸ்க்ரோனா என்னும் சிறிய நகரில் இருக்கும் அவர், சிங்கப்பூரிலிருந்து சக ஊழியர்களுடன் வேலைக்காக ஸ்வீடனுக்கு முதல் முறையாக அனுப்பப்பட்டார். இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அங்கு தங்கியுள்ள ராமசாமி, அடுத்தாண்டு தொடக்கம் வரை அங்கிருப்பார்.

சிங்கப்பூர் கடல் படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் அவர், சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் பணிபுரிவதைத் தனது இலக்காகக் கொண்டிருந்தார். அதுவும் சீருடை அணிந்துகொண்டு வேலைக்குச் செல்வதில் ராமசாமிக்குத் தனி இன்பம்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவருக்கு, இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சென்றாண்டு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியதை நினைவுகூர்ந்த அவர், இம்முறை மங்கலத் திருநாளைத் தனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு வயதாகும் அவரது இளைய மகள் ஹரிணியுடன் கொண்டாட முடியாமல் போனதை எண்ணி வருந்தினார்.

இன்று வீட்டில் மனைவியும் பெற்றோரும் பரபரப்பாகப் பண்டிகைக்குத் தயாராகிக்கொண்டிருந்தாலும், சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியைக் காண ஆவலுடன் உள்ளார்.

கப்பலில் பணியாற்றிய சமையல்காரர், ராமசாமிக்கும் மற்ற ஊழியர்களுக்கும் இந்திய உணவு வகைகளைச் சமைத்துத் தந்தார். கப்பலில் தீபாவளியன்று பிரியாணி சுவைத்த அனுபவம் இன்னும் ராமசாமியின் மனதினில் நிழலாடிக்கொண்டிருக்கிறது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!