தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களைப் பண்படுத்திய மணிமன்ற மலர்

4 mins read
39e0f194-e1bd-4e3a-ba45-3534d831fd96
1950களில் சிறுவர்களாக மாணவர் மணிமன்ற உறுப்பினர்களாக இருந்த 77 வயது செ. ப. பன்னீர்செல்வம் , 79 வயது துரைமாணிக்கம் ஆகியோர், திரு பன்னீர்செல்வத்தின் இளம்பருவ படத்தைக்கொண்டுள்ள செய்தித்தாளைப் பார்க்கின்றனர். - படம்: பே. கார்த்திகேயன்

தமிழ்மொழியுடன் பயனுள்ள நாட்டு நடப்புகளையும் தனிமனிதப் பண்புகளையும் கடந்த 73 ஆண்டுகளாகப் புகட்டி வருகிறது மாணவர்களுக்கான தமிழ் முரசின் துணையிதழ். மாணவர் மணிமன்ற மலர் என்ற பெயருடன் தொடங்கிய மாணவர் மணிமன்ற மலர், 2002ல் மாணவர் முரசு எனப் பெயர் மாற்றம் கண்டது. 

1952ல் திரு கோ சாரங்கபாணி மாணவர் மணிமன்றத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் பெரிய தாளில் ஒரு பக்கமாக வந்தது. பின்னர்  6.7.1953 முதல், அது நான்கு பக்கத் துணை இதழாக வெளிவரத் தொடங்கியது.

இதழாக மட்டுமின்றி, தொடக்கக் காலத்தில் சாரணர் இயக்கத்திற்கு ஒப்பான நெறிமுறை சார்ந்த மாணவர் இயக்கமாகத் திகழ்ந்தது. அன்றைய மாணவர்களாக அதில் சேர்ந்து, பிற்காலத்தில் தமிழ்த்துறையில் முத்திரை பதித்து, இன்று நிறைவுடன் முதுமைப் பருவம் எய்தி மகிழ்வோரில் சிலர், மணிமன்றம் குறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

1956ல் தமக்கு எட்டு வயதாக இருந்தபோது குடும்பத்தினர் செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கியதாக பழம்பெரும் ஊடகவியலாளர் செ.ப. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

1952ல் முதன்முதலாக வெளிவந்த மாணவர் மணிமன்ற மலர்
1952ல் முதன்முதலாக வெளிவந்த மாணவர் மணிமன்ற மலர் - படம்: தேசிய நூலக வாரியம்

அடிக்கடி அந்த மலரைப் படிக்கும் தம்மைக் கட்டுரை எழுதும்படி தம் தந்தை ஊக்குவித்ததாகத் திரு பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். 

திருக்குறளை நான் விரும்ப மூன்று காரணங்கள் என்ற தம் கட்டுரை பதிப்பித்த இனிய நினைவை அவர் பகிர்ந்துகொண்டார்.

“அச்சிதழை நான் பள்ளிக்கு எடுத்துச் சென்று, அதனைச் சக மாணவர்களிடம் காட்டி மகிழ்வேன்,” என்று அவர் முகமலரக் கூறினார். 

செ ப பன்னீர்செல்வத்தின் இளம் வயது படத்துடன் கட்டுரை.
செ ப பன்னீர்செல்வத்தின் இளம் வயது படத்துடன் கட்டுரை. - படம்: செ ப பன்னீர்செல்வம்

மாணவர் மணிமன்ற மலரின் சிறார் உறுப்பினர்கள் வாரந்தோறும் 125 சிராங்கூன் சாலையிலுள்ள சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் கட்டடத்தில் கூடியதை அவர் நினைவுகூர்ந்தார். 

தேநீர் பரிமாறி அங்கு வரவேற்கப்படும் பிள்ளைகள், கண்டிப்பாக எழுதவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திரு பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். 

தமிழ் முரசு படிக்கவேண்டும், மாணவ மணிமன்ற மலர் படிக்கவேண்டும் என்று உறுதியுடன் மாணவர்கள் வீடு திரும்புவர். எழுத்தாளர்கள் மா.இளங்கண்­ணன், வே. முல்லைவாணன்,  க.து.மு. இக்பால், எம்.கே. நாராயணன், பாத்­தே­றல் இள­மா­றன், பெ. திருவேங்கடம், ஐ. உல­க­நா­தன் முதலியோரின் எழுத்துப் பணி, இந்த மலரில்தான் தொடக்கம் கண்டது. 

மாணவர்களிடையே அறிவார்ந்த எண்ணப்போக்குகளை மணிமன்றத்தின் அன்றைய நடத்துநர் தூண்டியதையும் திரு பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார். 

“எங்களில் சிலர், சீர்காழி கோவிந்தராஜன், கே பி சுந்தராம்பாள், சி. எஸ் ஜெயராமன் பாடல்களைப் பாடுவோம். அவை மெய்யியல், சமூக நீதி, பண்பாடு, மொழிப்பற்று ஆகியவற்றுடன் தொடர்பான பாடல்களாகும். பாடல்களின் வரிகளை விளக்கும்படியும் சங்கத்தினர் எங்களிடம் கேட்பர்,” என்றார் அவர்.

கருத்துச்செறிவுமிக்க மாணவர் படைப்புடன், மாணவர்க்கென்று எழுதப்படும் தலையங்கம், ஆசிரியர்கள் மாணவர்களுக்காக எழுதும் கட்டுரைகள் ஆகியவையும் மலரில் இடம்பெற்றன. “300க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆண்டு மலர் மிகவும் சிறப்பானதாக இருக்கும்,” என்று திரு பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். 

மாணவர் மணிமன்ற மலரைப் படித்து வளர்ந்த அவர், பிறகு தமிழ் முரசு இதழுடன் 1950களில் சிங்கப்பூரில் விற்கப்பட்டு வந்த மலைநாடு, தேச தூதன் போன்ற இதழ்களைத் தேக்கா வட்டாரத்தில் ஆர்வத்துடன் வாங்கி வீட்டுக்குச் செல்வார். 

தமிழர் திருநாளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விதமான திறன் போட்டிகளில் கலந்துகொண்டதையும் திரு பன்னீர்செல்வம் நினைவுகூர்ந்தார். 

“விக்டோரியா அரங்கின் நிகழ்ச்சி மேடையில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் எஸ் ராஜரத்னத்தின் துணைவியார் பேசு்சுப்போட்டிக்கான முதல் ஆறுதல் பரிசை எனக்கு வழங்கினார். அவரிடம் கோ. சாரங்கபாணி அந்தப் பரிசை எடுத்துத் தந்தார். திரு சாரங்கபாணியை முதன்முதலில் சந்தித்தபோது என்னிடம் அவர்,  ‘மொழி உனக்கு நன்றாக வருகிறது, அதில் கவனம் செலுத்து’ என்று கூறினார். அதனை என்னால் மறக்கவே முடியாது,” என்ற திரு பன்னீர்செல்வம் மலரும் நினைவுகளில் மூழ்கினார்.

மலேசியாவின் சா.ஆ. அன்­பானந்தன், சீனி நைனா முகம்­மது, மு.அன்புச்செல்வன் போன்ற பல படைப்­பா­ளி­க­ள் அறி­மு­கம் கண்டது மாணவர் மணி மன்ற மலரில்தான். திரு சாரங்கபாணியின் இசைவுடன் மாணவர் மலேசிய இளையர் மணிமன்றம், பின்னர் இளையர் மணி மன்றமாக உருமாற்றம் கண்டது. 

மணிமன்றத்தின்வழி, சிங்கப்பூரைக் கடந்து மலேசியாவில் பேனா நண்பர்களுக்கு அறிமுகமானதாக 1998ல் எழுத்துப்பணிக்காக கலாசாரப் பதக்கம் பெற்ற இராம. கண்ணபிரான், 81, தெரிவித்தார். 

“1954ல் எனக்கு 11 வயது. மன்ற உறுப்பினர் எண் எனக்குக் கிடைத்தது. கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பது மன்றத்தின் விதிமுறையாக இருந்தது. எனவே, இரு பேனா நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டேன். ஈப்போவில் வசித்த பத்மநாபன் என்ற மாணவருடன்  சில ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்தேன். கடிதங்கள் எழுதியே என் எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டேன். பிற்காலத்தில் நான் பெற்ற விருதிற்கு மாணவர் மணிமன்றம் மலர் பாதை அமைத்துக் கொடுத்தது,” என்று அவர் கூறினார்.

மன்ற உறுப்பினராக இருந்தபோது இதழை விரும்பிப் படித்ததாக ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரும் முன்னாள் தமிழ் முரசு பிழைதிருத்துநருமான திரு துரைமாணிக்கம் தெரிவித்தார். “நான் ஆசிரியராக இருந்தபோது தொடர்ந்து மாணவர்களுக்குத் தமிழ் முரசு வாங்கித் தருவேன்,” என்றார் அவர். 

நான்குப் பக்க இதழாக இருந்த மாணவர் மணி மன்றம், பின்னர் மாணவர் மன்ற மலராகி, இப்போது மாணவர் முரசாக 12 பக்­கங்களு­டன் வெளி­வ­ரு­கிறது

குறிப்புச் சொற்கள்