சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழக வீரர் குகேஷ் தொம்மராஜு, 18, தோல்வியைத் தழுவினார்.
திங்கட்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற சதுரங்க வெற்றியாளர் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு வெற்றியாளரான சீனாவின் டிங் லிரனுடன் மோதினார் டி. குகேஷ்.
குகேஷ் வெள்ளை நிறக்காய்களுடனும் டிங் கருப்பு நிற காய்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டி 42 நகர்த்தல்கள் வரை சென்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியபோது, டிங் சாதுரியமாக விளையாடி வெற்றிக்கனியைத் தட்டிப்பறித்தார்.
போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் இளம் வீரர் குகேஷ், ஆட்டத்திற்கு முன்பு தாம் மிகவும் பதற்றமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
தம்மால் அமைதியாக இருக்க முடிந்தபோதிலும், தம்மை எதிர்த்து விளையாடிய டிங், நன்றாக விளையாடினார் என்பதைப் புரிந்துகொண்டதாகவும் கூறினார் குகேஷ்.
இதற்கிடையே, இரண்டு உத்திகளைத் தவறவிட்டபோதிலும், அந்த நடவடிக்கை தனக்குச் சாதகமாகவும், போட்டியாளர் குகேஷுக்குப் பாதகமாகவும் இருந்ததால் அதிர்ஷ்டம் தம்பக்கம் இருந்ததாகச் சொன்னார் டிங்.
சிங்கப்பூரில் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கிய உலக சதுரங்க வெற்றியாளர் போட்டி டிசம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றியாளர் பட்டத்துக்காக இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் இருவரும் மோதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இப்போட்டிகள் 14 சுற்றுகள் இருக்கும் நிலையில், ஒரு சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். அவ்வகையில் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர், உலக சதுரங்க வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் இரண்டாவது ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும்.