பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (சீ கேம்ஸ்) பூப்பந்துப் போட்டிகள் பெண்கள் குழுப் பிரிவில் சிங்கப்பூருக்குப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
இந்தத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் பதக்கம் வெல்வது உறுதியாகியிருக்கும் முதல் போட்டி இது.
பூப்பந்துப் போட்டி பெண்கள் குழுப் பிரிவில் அரையிறுதியில் தோல்வியடையும் இரு குழுக்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். அதனால், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிங்கப்பூர் வீராங்கனைகளுக்குக் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.
தாய்லாந்தின் பாத்தும் தானி மாநிலத்தில் உள்ள தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் நடந்த காலிறுதிச் சுற்றில் பிலிப்பீன்ஸ் அணியை 3-0 எனும் ஆட்டக் கணக்கில் வென்றது சிங்கப்பூர். இன்சைரா கான், மேகன் லீ, ஜேஸ்லின் ஹோய் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர் அணி, பிலிப்பீன்சின் மிக்கேலா ஜோய் டி குஸ்மான், யிசாபெல் அமோரா, சிறிஸ்டெல் ரெய் ஃபுவென்டெஸ்பினா ஆகியோரைக் கொண்ட அணியை வென்றது.
இனி திங்கட்கிழமை (டிசம்பர் 8) அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூர், தாய்லாந்தைச் சந்திக்கும்.
2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தாய்லாந்து அணி வாகை சூடியதால் அது அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

