தோக்கியோ: ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்றுவரும் உடற்குறையுள்ளோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஒரே வாரத்தில் மூன்று முறை தவறான தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதற்காக நகோயா நகரின் மேயர் இச்சிரோ ஹிரோசாவா அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
நகோயாவில் அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேசிய கீதங்களைச் சரியாக இசைப்பது உள்ளிட்ட தவறுகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.
இருப்பினும், அதே போன்ற தவறுகள் மீண்டும் உடற்குறையுள்ளோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்ந்தது குறித்து நகோயா நகர மேயர் கவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மேயர் ஹிரோசாவா, முந்தைய தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு செயல்பாடுகளை மறுஆய்வு செய்த போதிலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறினார்.
இது மிகவும் வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நகோயா நகரில் உடற்குறையுள்ளோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அக்டோபர் 19ஆம் தேதி நடந்த ஆண்களுக்கான தேக்வாண்டோ போட்டியில் தைவான் வீரர் ஒருவர் தங்கம் வென்றார்.
ஆனால், அவரது நாட்டின் தேசிய கீதத்திற்குப் பதிலாக ஈரானின் தேசிய கீதம் முழுமையாக இசைக்கப்பட்டது.
அதே நாளில் நடைபெற்ற பெண்களுக்கான தேக்வாண்டோ பரிசளிப்பு விழாவில், மங்கோலிய வீராங்கனை தங்கம் வென்றபோது மீண்டும் ஈரானிய தேசிய கீதமே இசைக்கப்பட்டது.
மங்கோலியக் குழுவினர் சுட்டிக்காட்டிய பிறகே இசை நிறுத்தப்பட்டு, அவர்கள் வழங்கிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மேலும், சீனா, ஈரானுக்கு இடையிலான உட்கார்ந்து விளையாடும் வாலிபால் போட்டிக்கு முன்னதாக, சீன தேசிய கீதத்திற்குப் பதிலாக தென்கொரிய தேசிய கீதம் ஐந்து விநாடிகள் ஒளிபரப்பப்பட்டது.
