சிங்கப்பூர் தந்த அதிர்ச்சியால் ஓய்வை அறிவித்த சீனக் குழுத் தலைவர்

சிங்கப்பூர் தந்த அதிர்ச்சியால் ஓய்வை அறிவித்த சீனக் குழுத் தலைவர்

1 mins read
ea01c390-db9a-4dcf-a8f8-d934aa124773
சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் மார்ச் 21ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூரை வீழ்த்த முடியாமல் போன சோகத்தில் சீனக் காற்பந்துக் குழுவினர். - படம்: ராய்ட்டர்ஸ்

உலகக் கிண்ணக் காற்பந்துக்கான ஆசியத் தகுதிச் சுற்றில் மார்ச் 21ஆம் தேதி (வியாழக்கிழமை) சிங்கப்பூரும் சீனாவும் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

முதலில் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தபோதும், சிங்கப்பூர்க் குழு மீண்டெழுந்து இரு கோல்களைப் போட்டு, சீனாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

இதனையடுத்து, சீனக் குழுவின் தலைவர் ஸாங் லின்பெங், 34, தேசியக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து வெகுநாள்களாகவே யோசித்து வந்துள்ளேன். அதற்கு இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன்,” என்று தற்காப்பு ஆட்டக்காரரான ஸாங், ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழிடம் கூறினார்.

“சிங்கப்பூர்க் குழுவைக்கூட எங்களால் வெல்ல முடியவில்லை. என்னால் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை, அவமானமாக உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

ஆயினும், ஸாங்கின் ஓய்வு முடிவைச் சீனக் காற்பந்துச் சங்கம் உறுதிப்படுத்தவில்லை.

சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டத்தை அடுத்து, ‘சி’ பிரிவில் சீனா நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒரு புள்ளியுடன் சிங்கப்பூர் கடைசி, நான்காம் இடத்தில் இருக்கிறது.

தென்கொரியா ஏழு புள்ளிகளுடனும் தாய்லாந்து நான்கு புள்ளிகளுடனும் முறையே முதலிரு நிலைகளில் உள்ளன.

சிங்கப்பூரும் சீனாவும் இம்மாதம் 26ஆம் தேதி தியான்ஜின் ஒலிம்பிக் மைய அரங்கில் மீண்டும் எதிர்த்தாடவுள்ளன.

குறிப்புச் சொற்கள்