தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

29 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு

1 mins read
dc942063-7426-44b4-97c0-e336fcf84c09
உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க். - படம்: ஊடகம்

அடிலெய்டு: முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 29 பந்துகளில் சதமடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்.

இம்மாதம் 8ஆம் தேதி அடிலெய்டில் நடந்த தாஸ்மேனியா அணிக்கெதிரான போட்டியில் அச்சாதனையை நிகழ்த்தினார் தெற்கு ஆஸ்திரேலிய அணியின் 21 வயதான ஃபிரேசர் மெக்கர்க்.

முதலில் பந்தடித்த தாஸ்மேனியா அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 435 ஓட்டங்களைக் குவித்தது. கடின இலக்கை விரட்டிய தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஃபிரேசர் மெக்கர்க் அதிரடித் தொடக்கம் தந்தபோதும், அதனால் வெற்றிபெற இயலவில்லை. அவ்வணி 46.4 ஓவர்களில் 396 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரில் நூறு ஓட்டங்களை எட்டினார் ஃபிரேசர் மெக்கர்க். 12ஆவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் பத்து பவுண்டரி, 13 சிக்சர் உட்பட 125 ஓட்டங்களை விளாசினார்.

2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த அனைத்துலக ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்திருந்ததே முன்னைய உலக சாதனை.

இப்படி அதிரடியாக இதற்குமுன் விளையாடி இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “காணொளி விளையாட்டில் வேண்டுமானால் இருக்கலாம். உண்மையில், உறுதியாக இல்லை,” என்று வேடிக்கையாகக் கூறினார் ஃபிரேசர் மெக்கர்க்.

குறிப்புச் சொற்கள்