ஜாலான் புசார் விளையாட்டரங்கிற்குப் புதிய தென்மாடம் சேர்க்கப்படலாம்

ஜாலான் புசார் விளையாட்டரங்கிற்குப் புதிய தென்மாடம் சேர்க்கப்படலாம்

1 mins read
கூடுதலாக 1,500 இருக்கைகள்
c5ae508a-2dcb-4948-8bfa-b4cf5f2d5849
2026 ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜாலான் புசார் விளையாட்டரங்கில் தாய்லாந்திற்கு எதிரான ஆசியான் வெற்றியாளர் அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்திற்குப் பிறகு, ரசிகர்களுக்கு முன்னால் நின்ற சிங்கப்பூர் வீரர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் புசார் விளையாட்டரங்கை விரிவாக்கம் செய்வது குறித்துச் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கமும் ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

இவ்வாண்டு ஆகஸ்ட்டில் நிறைவடைந்த ஆசியான் வெற்றியாளர் தொடருக்குப் பிறகு இருதரப்பும் இது குறித்துத் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.

தற்போது 6,000 பேர் அமரக்கூடிய இடவசதியோடு, கூடுதலாக 1,500 இருக்கைகள் கொண்ட புதிய தென்மாடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் காற்பந்துச் சங்கத் தலைவர் ஃபாரஸ்ட் லீ புதன்கிழமை (செப்டம்பர் 16) உறுதிப்படுத்தினார்.

இத்திட்டம் உறுதி செய்யப்பட்டால், புதிய மாடம் கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் அமைக்கப்படும். முன்னர் லயன்ஸ்XII அணி மலேசிய சூப்பர் லீக் தொடரில் விளையாடியபோது 2012ல் தற்காலிகமாகக் கிங் ஜார்ஜஸ் மாடம் அமைக்கப்பட்டு, பின்னர் 2015ல் அது பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

அண்மைக்காலமாக நடந்த ஆசியான் வெற்றியாளர் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளுக்குக் கடும் போட்டி ஏற்பட்டதால் அரங்கத்தை விரிவாக்கம் செய்ய ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அணிப் பயிற்றுவிப்பாளர் கெவின் லீ தலைமையிலான சிங்கப்பூர்க் காற்பந்து அணி, 2025 நவம்பரில் முதன்முறையாக ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அது உட்பட அணி கண்டுவரும் நல்ல முன்னேற்றத்தால் ரசிகர்களின் ஆதரவு பேரளவு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்