தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்’

2 mins read
541cbbd5-730c-49cb-a35b-ec4316d9357c
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இந்த மழலையின் சட்டையில் நினைவொப்பமிடுகிறார் அண்மையில் உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டம் வென்ற டி. குகேஷ். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 3

தற்போது உலகின் கவனத்தை தன்வசம் ஈர்த்துள்ள இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளராக வென்றது பலரும் எதிர்பாராததே.

முதல் சுற்றிலேயே பல ஜாம்பவான்கள், வல்லுநர்களால் அவர் கூர்ந்து கவனிக்கப்பட்டது பதினெட்டு வயது இளையரான அவருக்கு அளவிலா மன அழுத்தத்தைத் தந்ததாகப் பகிர்ந்துகொண்டார் குகேஷின் தந்தை டாக்டர் ரஜினிகாந்த்.

சனிக்கிழமை (டிசம்பர் 14) மாலை குகேஷைச் சிறப்பிக்க இந்தியத் தூதரகத்தில் ஏற்பாடாகியிருந்த நிகழ்வில் குகேஷின் தந்தை, தாயார் டாக்டர் பத்மா குமாரி, பாட்டி புனிதவதி உள்ளிட்ட உறவினர்கள் வந்திருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த இந்தியச் சமூகத் தலைவர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 70 பேர் குகேஷின் வெற்றியைக் கொண்டாடினர்.

உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் குகேஷின் ஒவ்வொரு நகர்த்தலையும் சதுரங்க உலகம் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட பதற்றம், முதல் ஆட்டத்திலேயே குகேஷ் அடைந்த தோல்வியில் வெளிப்பட்டதாக டாக்டர் ரஜினிகாந்த் கூறினார். ஆனால், அத்தகைய உளைச்சலே தமக்கு உந்துதலாக இருந்தது என்பது குகேஷின் அனுபவம்.

“என் மகனின் மனத்திற்குப் பிடித்தமானவை, அவனின் மகிழ்ச்சி, அவனின் விறுப்பு வெறுப்புகள் - இவையே என் முன்னுரிமை. பிள்ளைகளுக்குப் பெற்றோர் செவிசாய்த்தாலே போதும்,” என்று மகனுக்கு வழிகாட்டியதை குறித்துத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் குகேஷின் தந்தை.

குடும்பத்தார் அனைவரின் உழைப்புக்கும் நியாயம் செய்யும் விதத்தில் குகேஷ் சாதித்துக் காட்டியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் பாட்டி புனிதவதி.

வரலாறு போற்றும் சாதனையை இந்தியாவிற்கு நல்கிய குகேஷிற்குப் புகழாரம் சூட்டினார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே.

குகேஷின் வெற்றியைக் குறைத்து எடைபோடும் எதிர்மறையான செய்திகள் வெளிவந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரனின் பிசகான நகர்த்தலை உத்திபூர்வமாக திட்டமிட்டு அவர் சாதித்ததாகவும் அவருக்கு ஈடுகொடுத்து இறுதிவரை தளராமல் இருந்ததாகவும் கூறி அவரின் வெற்றியைத் தற்காத்தார் டாக்டர் அம்புலே.

குகேஷ் போற்றிப் பின்பற்றும் விளையாட்டு வீரர்களான டோனி, ஜோக்கோவிச்சுக்கு நிகரான கடும் உழைப்பையும் பற்றையும் அவர் வெளிப்படுத்தியதாகவும் டாக்டர் அம்புலே குறிப்பிட்டார்.

உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை இன்னும் பல ஆண்டுகள் தக்கவைத்து, அடுத்த விஸ்வநாதன் ஆனந்தாக குகேஷ் உருவெடுக்கவேண்டும் என்று கூடியிருந்த பலரின் வாழ்த்துகளின் எதிரொலியாக டாக்டர் அம்புலே பேசினார்.

சிங்கப்பூரின் சுற்றுலாத் தலங்களோடு குகேஷின் பெயர் பொறிக்கப்பட்ட விருதினை அவருக்கு வழங்கிய டாக்டர் அம்புலே, இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் ‘ஜென் ஸி’ எனும் இளந்தலைமுறைக்கு அவரை முன்மாதிரியாக பாவித்தார்.

அசாத்தியமானதாகப் போற்றப்பட்டு வருகிறது குகேஷின் சதுரங்க வெற்றிப் பயணம்.

2017ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் அனைத்துலக மாஸ்டர், 2019ல் புதுடெல்லி போட்டியில் கிராண்ட்மாஸ்டர், கடந்த ஆண்டு விஸ்வநாதன் ஆனந்தை முந்தி, சதுரங்கத் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம், உலக அளவில் ஐந்தாமிடம் என இடைவிடாது சிகரம் நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறார் குகேஷ்.

vishnuv@sph.com.sg

குறிப்புச் சொற்கள்