மெஸ்ஸி சர்ச்சை: ஆட்டங்களை அமெரிக்காவிற்கு மாற்றிய அர்ஜென்டினா

மெஸ்ஸி சர்ச்சை: ஆட்டங்களை அமெரிக்காவிற்கு மாற்றிய அர்ஜென்டினா

1 mins read
3f51a1ad-04f7-47e3-bffd-b40db72aac32
ஹாங்காங் - இன்டர் மயாமிக்கு எதிரான ஆட்டத்தில் லயனல் மெஸ்ஸி கடைசிவரை களமிறங்காததால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பியூனஸ் அய்ரஸ்: அர்ஜென்டினா காற்பந்துக் குழு அமெரிக்காவில் இரண்டு நட்புமுறை ஆட்டங்களை விளையாடும் என்று அந்நாட்டுக் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, நைஜீரியா, ஐவரி கோஸ்ட் அணிகளுடன் அர்ஜென்டினா மோதும் நட்புமுறை ஆட்டங்கள் சீனாவில் நடைபெறுவதாக இருந்தன. ஆனால், சீனா அவற்றை ரத்து செய்துவிட்டது.

அண்மையில் ஹாங்காங்கில் இன்டர் மயாமி குழுவும் ஹாங்காங் லெவன் குழுவும் மோதிய ஆட்டம் இடம்பெற்றது. அர்ஜென்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி, மயாமி அணியில் இடம்பெற்றிருந்ததால் அவரது ஆட்டத்தைக் காணும் ஆர்வத்துடன் அரங்கில் 40,000 பேர் திரண்டிருந்தனர். ஆனால், அவர் கடைசிவரை களமிறங்கவே இல்லை.

இதனால் வெகுண்டெழுந்த ரசிகர்கள், ஆட்டம் முடிந்த பின்னர் மெஸ்ஸிக்கும் மயாமி குழுவின் இணை உரிமையாளர் டேவிட் பெக்கமுக்கும் எதிராகக் குரல் எழுப்பினர். நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதனையடுத்து, தான் காயமுற்று இருந்ததாலேயே விளையாடவில்லை என்று மெஸ்ஸி விளக்கமளித்தார்.

இந்நிலையில், பிலடெல்பியாவில் மார்ச் 22ஆம் தேதி எல் சால்வடோர் அணியுடனும் அதற்கு நான்கு நாள்களுக்குப்பின் லாஸ் ஏஞ்சலிசில் நைஜீரியாவிற்கு எதிராகவும் அர்ஜென்டினா அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்