நியூ ஜெர்சி: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் விறுவிறுப்பான மூன்றாம் சுற்று ஆட்டத்தில், ஐந்து முறை வெற்றியாளரான பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்வே அணி முதன்முறையாகக் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் திங்கட்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற இப்போட்டியில், அரங்கம் முழுவதும் பிரேசில் ரசிகர்களின் ஆரவாரம் நிறைந்திருந்தது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் பிரேசில் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புரூனோ கிமாரெஸ் கோலாக மாற்றத் தவறினார். இதனால் முற்பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பிற்பாதியில் நார்வே பயிற்றுநர் ஸ்டேல சோல்பாக்கன் செய்த வியூக மாற்றங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றின.
மாற்று வீரராகக் களம் புகுந்த ஆண்ட்ரியாஸ் ஷெயில்திருப் அனுப்பிய பந்தைத் தலையால் துல்லியமாக வலைக்குள் முட்டித் தள்ளி, நார்வேயின் முதல் கோலை அடித்தார் அதன் நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட்.
அதன்பின் 90வது நிமிடத்தில், கோல் கட்டத்திற்கு வெளியிலிருந்து அவர் அடித்த மற்றொரு மின்னல் வேக கோல் நார்வேயின் வெற்றியை உறுதிசெய்தது.
மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்த பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். எனினும், அது பிரேசிலின் தோல்வியைத் தடுத்து நிறுத்த உதவவில்லை.
உலகக் கிண்ண வரலாற்றில் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகப் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.
இந்தத் தொடரில் இதுவரை ஏழு கோல்களை அடித்துள்ள ஹாலண்ட், தங்கக் காலணி விருதுக்கான போட்டியில் எம்பாப்பே மற்றும் மெஸ்ஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
காலிறுதிச் சுற்றில் நார்வே அணி, மெக்சிகோ அல்லது இங்கிலாந்து அணியை எதிர்த்தாடவுள்ளது.
காலிறுதியில் இங்கிலாந்து
இதனிடையே, மெக்சிகோ அணியை அதன் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து, மெக்சிகோ அணியினரை மிரள வைத்தார். பின்னர், மெக்சிகோவின் ஜூலியன் குவினோனஸ் ஒரு கோல் அடித்து இடைவெளியைக் குறைத்தார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால், அவ்வணி எஞ்சிய நேரத்தில் பத்து வீரர்களுடன் விளையாட வேண்டியதாயிற்று.
அதன்பின், இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன் பெனால்டி மூலம் ஒரு கோலடிக்க, தொடர்ந்து மெக்சிகோவின் ராவுல் ஜிமினேசும் ஒரு பெனால்டி கோல் அடித்தார்.
ஜூலை 12ஆம் தேதி நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நார்வேயும் பொருதவுள்ளன.

