இவ்வாண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களின் நேரடி ஒளிபரப்பு 50க்கும் மேலான சமூக மன்றங்கள், ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு நிலையங்கள், ‘த காலாங்’ என்றழைக்கப்படும் தேசிய விளையாட்டரங்க வளாகம் ஆகியவற்றில் இலவசமாகத் திரையிடப்படவுள்ளன.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி வரை இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுகிறது. அந்தக் காலகட்டத்தில் ஆட்டங்கள் திரையிடப்படும்.
விவரங்கள் வெளியிடப்பட்டன
மக்கள் கழகம், ஸ்போர்ட்எஸ்ஜி, த காலாங் குழுமம் ஆகியவை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) எந்தெந்த உலகக் கிண்ண ஆட்டங்கள் திரையிடப்படும் என்ற தகவலை வெளியிட்டன. குடும்பங்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோர் சமூகமாக ஒன்றுகூடி, காற்பந்தைக் கொண்டாட வகைசெய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவை குறிப்பிட்டன.
உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் போட்டியை ஏற்றுநடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவும் மோதுகின்றன. அந்த ஆட்டத்திலிருந்து மக்கள் கழகம் ஆட்டங்களைத் திரையிடும். அந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஜூன் 12ஆம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு நடைபெறும்.
அதே நாள் காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் தென்கொரியாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான ஆட்டத்திலிருந்து ஸ்போர்ட்எஸ்ஜி ஆட்டங்களைத் திரையிடும்.
போட்டியின் கடைசி நான்கு ஆட்டங்கள் ‘த காலாங்’கில் திரையிடப்படும்.
தகவல்கள் இடம்பெறும் இணைய முகவரிகள்
எந்தெந்தச் சமூக மன்றங்களில் ஆட்டங்கள் திரையிடப்படும் என்ற தகவல்களை go.gov.sg/web-pa-wc2026 என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் எந்தெந்த ஆக்டிவ்எஸ் விளையாட்டு நிலையங்களில் ஆட்டங்கள் திரையிடப்படும் என்ற தகவல்களை go.gov.sg/worldcup26-sportsg இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

