சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில், முக அடையாளச் செயலி மூலம் ஏறக்குறைய 14 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
‘சிடாக் கொல்கட்டா’ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் செயலியை தமிழக காவல்துறை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபரின் புகைப்படத்தை காவல் நிலையக் கணினிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு, முக அடையாளத்தைக் காட்டுகிறது இந்தச் செயலி.
இதன் மூலம் பல்வேறு குற்றங்களைச் செய்தவர்கள், பல வழக்குகளில் தேடப்படுவர்கள், காணாமல் போனவர்கள், சந்தேகத்துக்கு உரியவர்கள், புதிய குற்றவாளிகள், தலைமறைவாக உள்ள குண்டர்கள் என ஏராளமான தரவுகளுடன் இந்த ஒப்பீடு நடக்கிறது.
“ஒருவர் மீது சந்தேகம் எழும்போது காவல்துறையினர் முக அடையாளச் செயலியின் மூலம் அவரைப் படம் பிடிக்கும்போது, கணினியில் உள்ள தரவுகளை வைத்து அவருக்கு ஏதேனும் குற்ற வழக்குகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அந்தச் செயலி உடனுக்குடன் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து குற்றவாளிகளைக் காட்டிக்கொடுத்துவிடும்.
“இதனால் குற்ற வழக்குகளின் விசாரணை வேகமடைகிறது,” என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


