2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக 18, அதிமுக 20, தவெக 23 பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம்

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக 18, அதிமுக 20, தவெக 23 பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம்

2 mins read
bac51ca1-25fd-4025-a5a6-14c888335ba5
23 பெண் வேட்பாளர்களில் எட்டுப் பேர் தனித் தொகுதியிலும், ஏற்காடு (பழங்குடி) தொகுதியில் ஜே. லட்சுமி என்பவரும் வேட்பாளர்களாக உள்ளனர். - படம்: நியூஸ் 18

சென்னை: தமிழகத்தின் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் அறிமுகக் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை பெண் வேட்பாளர்களுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கியுள்ளன என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திமுக, அதிமுகவின் நிலைப்பாடு

ஆளுங்கட்சியான திமுக, தற்போது வரை 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மூன்று கட்டங்களாக 167 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதில் 20 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

இரு கட்சிகளுமே சுமார் 11 முதல் 12 விழுக்காடு வரையிலான இடங்களைப் பெண்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளன.

தவெகவின் 23 பெண் சிங்கங்கள்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.

இவர்களில் மொத்தம் 23 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், தற்போது வரை மற்ற இரு பெரிய கட்சிகளை விடவும் தவெக அதிக பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக சார்பில் சத்தியபாமா (திருப்பூர் வடக்கு), விஜயலட்சுமி (குமாரபாளையம்), பல்லவி (திரு வி க நகர்), காமாட்சி (பல்லாவரம்), தாராபுரம் தொகுதியில் கௌரி சித்ரா உள்ளிட்ட 23 பேர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

50-50 என்ற பிரதிநிதித்துவத்தை கொள்கையாக வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்