முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்காக 25 இளம் வல்லுநர்கள் தேர்வு: உதயநிதி வாழ்த்து

1 mins read
0fe2d182-1a97-4225-b268-884d4a124e3c
உதயநிதி ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தின்கீழ் பணியாற்ற 25 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் தொழில், கல்விப் பின்புலம் சார்ந்த இளம் வல்லுநர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அடிப்படையில், முதல்வர் புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, 2022-24ஆம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பின்னர் அவர்கள் பலதுறை சார்ந்த திட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய 19 பேருக்கு, ’பொது கொள்கை மற்றும் மேலாண்மை’யில் முதுநிலை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தின்கீழ் 2024-26 ஆண்டுகளில் பணியாற்ற 25 இளம் வல்லுநர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.

மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இத்தேர்வுகளின் முடிவில், 177 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. இதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 இளம் வல்லுநர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இந்த முயற்சியின் மூலம் ஒவ்வொருவரும் கற்று, முன்னேறி, வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்