சென்னையில் 36 புதிய பூங்காக்கள், 11 விளையாட்டுத் திடல்கள்

சென்னையில் 36 புதிய பூங்காக்கள், 11 விளையாட்டுத் திடல்கள்

கோப்புப் படம்: தினத்தந்தி

31 Oct 2026 - 10:42 pm

1 mins read

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முதற்கட்டமாக ரூ.34.45 கோடி மதிப்பீட்டில் 36 புதிய பூங்காக்களும் ரூ.9.52 கோடி மதிப்பீட்டில் 11 புதிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்பட உள்ளன.

முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் நகர்ப்புற பசுமையாக்கல், பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்க ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆலந்தூர், மணலி, தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள 36 முக்கியமான இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன.

அதேபோல், மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் இளையர்கள், சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் 11 புதிய விளையாட்டுத்திடல்கள் அமைக்கப்படுகின்றன.

இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒப்பந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் உடனடியாக பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்