சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் முன்னாள் மேலாளர் உட்பட மூன்று பேர் மீது காவல்துறை மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்து, நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அச்சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் துாண்டுதலில், சங்க உறுப்பினர் சங்கர்பாபு, முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து, ‘எவர்கிரீன் மீடியா’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளதாகவும் இது நடிகர் சங்கத்தின் ஒரு துணை அமைப்பு எனப் பொதுவெளியில் சட்டவிரோதமாக விளம்பரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நடிகர் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, அனைத்து உள்ளூர், தனியார், தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகள் பெற்று, அதன் வாயிலாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
“இது தொடர்பாக, எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை செய்தோம். அப்போது, சட்ட விரோதமான இந்த நடவடிக்கை வாயிலாக, 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது,” என்று தர்மராஜ் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால் நடிகர், நடிகையர் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, சங்க செயற்குழுவைக் கூட்ட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


