50 பங்ளாதேஷியர்கள் நாடுகடத்தப்பட மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைப்பு

50 பங்ளாதேஷியர்கள் நாடுகடத்தப்பட மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைப்பு

1 mins read
369e5810-0280-4ff1-82fb-13da1c6930ae
50 பேருக்கும் தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டதுடன் 40 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புக்கு உடன் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. - படம்: மாலை மலர்

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 50 பங்ளாதேசியர்கள் நாடுகடத்தப்படும் நடவடிக்கைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 44 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர் என்றும் அனைவரும் சேலம் மாவட்டத்திலுள்ள சிறப்பு தடுப்பு காவல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்றும் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 50 பேரையும் நாடுகடத்த இந்திய அரசு உத்திரவிட்டதையடுத்து, கைதான அனைவரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின் அங்கிருந்து ரயிலில் மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

50 பேருக்கும் தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டதுடன் 40 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புக்கு உடன் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அனைத்துலக எல்லைச் சோதனை சாவடியான ஹரிதாஸ்பூர் பகுதிக்கு 50 பேரும் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் அங்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் தூதரக நடைமுறைகளுக்குப் பின் அனைவரும் பங்ளாதேஷ் எல்லைக் காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.

50 பங்ளாதேசியர்கள் வெளியேறிய பிறகும் ஆத்தூரிலுள்ள சிறப்புத் தடுப்புக் காவல் முகாமில் மேலும் 130 வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்