சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு நீலகிரியில் உள்ள அரசுப் பள்ளியில், ரூ.5,000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இத்தொகையை அளிக்க முன்வந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கீழுர் பகுதியில், கோக்கலாடா அரசு உயர்நிலை, தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு போதிய மாணவர்கள் இல்லாததால், இப்பள்ளி மூடப்பட்ட நிலையில், முன்னாள் மாணவர்களின் முயற்சியால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது அங்கு 42 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி, புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயரில், வங்கியில் வைப்புக்கணக்கு தொடங்கப்பட்டு, அதில் ரூ.5,000 வரை செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும் இத்தொகை கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.
இதுதவிர, சீருடை, புத்தகப் பை, காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், இலவச வாகன வசதி ஆகியவற்றுடன், அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கவும் பள்ளி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட குழு வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.