சிவகாசி: நடப்பாண்டில் சிவகாசியில் ரூ.6,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்றுத்தீர்ந்துள்ளன. அங்குள்ள 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் பணியாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சிவகாசி ஆலைகளில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் நாடு முழுவதுமுள்ள பல்வேறு முக்கியமான நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கடந்த ஆண்டைவிட இப்போது அதிக பட்டாசுகள் விற்பனையானதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
“இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் இதுவரை 90 விழுக்காடு பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகிவிட்டன. அடுத்து, கார்த்திகை தீபத் திருநாளுக்குள் அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையுள்ளது. ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகளை விற்கத் திட்டமிட்டிருந்தோம். அந்த இலக்கு எட்டிப்பிடிக்கப்பட்டுள்ளது,” என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.