சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் (80 விழுக்காடு) முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த தேர்தலில் நாங்கள் அளித்த 505 வாக்குறுதிகளில் 404ஐ வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளோம். மீதமுள்ள 101 வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
“அந்த முட்டுக்கட்டைகள் காரணமாகவே அவை நிலுவையில் உள்ளன. இருப்பினும், கொடுத்த வாக்குறுதிகளில் 80 விழுக்காட்டை எட்டியுள்ளோம்,” என்றார் கனிமொழி.
“ஏறக்குறைய 80,000 கருத்துகளைப் பொதுமக்களிடம் கேட்டு, அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டுக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அறிக்கையில் சேர்க்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்,” எனக் குறிப்பிட்டார்.
“மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்துப் பயணம் போன்றவை இலவசத் திட்டங்கள் அல்ல; அவை பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள். திமுகவின் இந்தத் திட்டங்களைத்தான் அதிமுக இப்போது காப்பியடித்துள்ளது,” என்று தெரிவித்தார் கனிமொழி.
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதிமுகவின் அறிக்கையை நான் படிக்கவில்லை, உண்மையில் சொல்லப்போனால் மக்கள் யாரும் அதனைப் படிப்பதில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைத்தது அதிமுக அரசுதான். ஆனால், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராகக் குற்றம் இழைப்பவர்களுக்குத் தண்டனை கிடைப்பதை முதல்வர் உறுதி செய்கிறார்,” என்று சாடினார்.

