சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாலை 6 மணி நிலவரப்படி (இந்திய நேரம்) 84.69 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின.1952 முதல் நடைபெற்ற தேர்தல்களிலேயே இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலைவிடக் கூடுதலாக 25 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கு முன்னர் 2011 தேர்தலில் பதிவான 78.29 விழுக்காட்டு வாக்குகளைவிட இது அதிகம். இம்முறை ஏறத்தாழ 4.85 கோடி வாக்காளர்கள் வாக்களித்தாகக் கூறப்பட்டது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னரே காலை 6 மணிக்கெல்லாம் மக்கள் வாக்குச்சாவடிகளில் குவியத் தொடங்கிவிட்டனர்.
முதல் ஒரு மணி நேரத்திலேயே வாக்காளர்களின் வருகை எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருந்தது, பெரும் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
முதியவர்கள் முதல் முதன்முறை வாக்காளர்கள் வரை அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் காலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. குறிப்பாக, 74 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு கிடைத்துள்ள இந்த 70 விழுக்காடு வாக்குப்பதிவானது, பழைய கணக்கீட்டின்படி பார்த்தால் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான எழுச்சிக்குச் சமமானதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
மக்களை வாக்குச்சாவடிகளுக்கு ஈர்த்த காரணங்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத இந்த மாற்றத்திற்கு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும், அதனால் ஈர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களின் எழுச்சியும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்து, சில தொகுதிகளில் ஒரு வாக்குக்கு 25,000 ரூபாய்வரை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பண விநியோகப் புகார்கள், வாக்காளர்களை அதிக அளவில் திரளச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மீதான அதிருப்தியால், அமைதியாக இருந்த நடுத்தர வர்க்கத்தினர், செயலற்ற வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பி களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பரப்புரைகளும் இதில் பங்கு வகித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வழக்கமான மந்தநிலை மாறி, சென்னையில் மட்டும் 68.13 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்ட ரீதியாக, கரூரில் அதிகபட்சமாக 89%, சென்னையில் 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. கன்னியாகுமரியில் குறைந்தபட்சமாக 73.44% வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஆங்காங்கே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
மாலை 6 மணிவரை வரிசையில் நின்றிருந்த அனைவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்தத் தீர்ப்பின் முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி வெளிவரும்.

