ஓரங்கட்டப்பட்ட 91% வேட்பாளர்கள்

ஓரங்கட்டப்பட்ட 91% வேட்பாளர்கள்

2 mins read
49574800-9595-4dd5-bdcb-d6da0caaf924
2021 தேர்தலில் வெற்றிபெற்ற 234 பேருடன் தோல்வியடைந்த 107 பேரும் கௌரவமான அளவில் வாக்குகளைப் பெற்றனர். - படம்: தி இந்து

ஒரு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 91 விழுக்காட்டினர் தங்களது வைப்புத்தொகையைப் பறிகொடுப்பது என்பது ஓர் அதிசய நிகழ்வு. அந்த அதிசயம் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது.

அந்தத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி இருந்ததால் வாக்குகள் சிதறின. வைப்புத்தொகை இழப்புக்கு அதுவும் ஒரு காரணம். 2026 தேர்தலிலும் ஐந்து முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்தியாவின் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் பொது வேட்பாளர்கள் 10,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு அல்லது அவரது தொகுதியில் பதிவான வாக்குகளில் 16.67 விழுக்காட்டைப் பெற்றால் மட்டுமே வைப்புத்தொகைத் திருப்பித் தரப்படும். எளிய உதாரணம், 6,000 வாக்குகளில் 1,000 வாக்குகளைப் பெறவேண்டும்.

2021 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி மற்றும் கூட்டணி சேராத நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப்போட்டி நிலவியது.

அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர். எல்லாக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சார்பாகக் களமிறங்கிய 3,859 வேட்பாளர்களில் 3,518 வேட்பாளர்கள் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுமளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை. இது 91.16 விழுக்காடு.

வெற்றிபெற்ற வேட்பாளர்கள் 234 பேருடன் தோல்வியடைந்த 107 பேரும் கௌரவமான அளவில் வாக்குகளைப் பெற்று தங்களது வைப்புத் தொகையைத் திரும்பப் பெற்றனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தவிர்த்து அக்கட்சியின் 233 வேட்பாளர்கள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறவில்லை.

2021 தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய டிடிவி தினகரனின் அமமுக 171 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. திரு தினகரன் உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை மீட்டனர்.

ஆனால், டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டு சேர்ந்த தேமுதிக களமிறக்கிய 60 வேட்பாளர்களில் ஒருவர்கூட வைப்புத்தொகை பெறவில்லை. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் வைப்புத்தொகையை இழந்தார். அவருக்கு 13.17% வாக்குகளே கிடைத்தன.

அமமுகவைப் போலவே முதல்முறை களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 180 தொகுதிகளில் போட்டியிட்டு 178 தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்தது. கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் மட்டுமே வைப்புத் தொகையைத் திரும்பப் பெற்றனர்.

கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட நடிகர் சரத்குமாரின் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர்கூட வைப்புத் தொகையைத் திரும்பப் பெறவில்லை.

சுயேச்சையாகக் களமிறங்கியவர்களில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் மட்டுமே வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றார். மற்ற சுயேச்சைகளும் சிறு கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்காளர்களால் ஓரங்கட்டப்பட்டனர்.

2026 தேர்தலில் களம் காணும் தலைவர்களில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தவிர மற்ற அனைவரும் 2021 தேர்தலில் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறத் தேவையான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

தேர்தலில் போட்டியிடுவோர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுமளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை எனில் அது ஓர் அரசியல் அவமானமாகவே கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்