சென்னை: தமிழக பள்ளி மாணவி ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில், 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த, ஆறு வயதான லலித் ரேணு என்ற அந்தப் பள்ளி மாணவியை தமிழக துணை முதல்வர் பாராட்டினார்.
லலித் ரேணு, தன் தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷுடன் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி அனுபவம் பெற்றுள்ள ரேணு, கடைசியாக 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாதித்துள்ளார்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி, சாதனை படைத்த அவர், அதன் பின்னர் மலையடிவார முகாமை பத்திரமாக வந்தடைந்தார். இதையடுத்து, சாதனைச் சிறுமியை தலைமைச் செயலகத்துக்கு பெற்றோருடன் நேரில் வரவழைத்து வாழ்த்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேடயத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருவதாக தமிழக அரசு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.