பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர்மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர்மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு

1 mins read
c9ba6758-3000-4b48-a209-0446dcce5d86
அமைச்சர் சேகர் பாபு. - படம்: ஊடகம்

சென்னை: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனமே பழனி கோவிலுக்கும் விநியோகித்து வருவதாக தகவல்கள் பரவின. இதைத் தமிழக அரசு மறுத்தது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரம் குறித்து பேசினார்.

“கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.

“தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தான் தனியார் நிறுவனத்திடமிருந்து அரசு நெய் வாங்குகிறது. அந்த தனியார் நிறுவனம், தற்போது புகாருக்குள்ளான நிறுவனம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரப்புபவர்கள்மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்