தீபாவளிக்குள் அரிசி விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

தீபாவளிக்குள் அரிசி விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

படம்: தினமணி

28 Oct 2026 - 7:24 pm

2 mins read

சென்னை: தீபாவளிக்குள் அரிசி விலை முழுமையாகக் கட்டுக்குள் வரும் என்றும் தமிழக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம் நெல் மண்டியில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் நெல் மூட்டைகளைச் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புழல் ஏரி அருகே நெல் லாரிகளை ஆய்வு செய்து ஓட்டுநர்களிடம் அவர்கள் விவரங்களைக் கேட்டறிந்தனர்.

“தமிழகத்தில் அரிசி விலையைக் குறைக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தெலுங்கானாவில் இருந்து நாள்தோறும் 4,000 டன்னுக்கும் அதிகமான மிகச் சன்ன ரக நெல் தமிழகத்திற்கு வருகிறது. 150 முதல் 200 லாரிகளில் நெல் வரத்து உள்ளது. லாரிகள் சிரமமின்றி வந்து செல்லவும், வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீபாவளிக்குள் அரிசி விலை நிச்சயம் குறையும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கூறினார்.

சன்ன ரக அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதே முதலமைச்சரின் முதன்மை விருப்பம் என்று தொடர்ந்து பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

வெளிமாநில நெல்லை உள்ளூர் விவசாயிகளின் நெல் எனக்கூறி கலப்படம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

“நல்ல காரியங்களை அரசியல் ஆக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், எல்லைகளில் நெல் லாரிகளை அதிகாரிகள் தடுக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக எச்சரித்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல் மூட்டைகளை எல்லைகளில் உள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினாலோ அல்லது திருப்பி அனுப்பினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்.

குறிப்புச் சொற்கள்