அறிமுகமே வெற்றிமுகம்

அறிமுகமே வெற்றிமுகம்

3 mins read
5e5d827b-076d-4e2b-8d8c-723836968f27
நடிகர் விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். - படம்: தினமணி

மக்கள் மனம் கவர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் பெரிய படைபலத்துடன் களமிறங்கும்போது அந்த நடிகருக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் மகத்தான வரவேற்பு அளித்து வெற்றிபெறச் செய்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது.

அதற்கு உதாரணம் விஜயகாந்த் மட்டுமல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதாகூட புதிய கட்சி, புதிய சின்னத்தில் தேர்தல் களத்திற்கு அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள்.

1977ல் அதிமுக என்னும் கட்சியும் இரட்டை இலைச் சின்னமும் 234 தொகுதிகளிலும் அறிமுகம் கண்டது. அருப்புக்கோட்டையில் போட்டியிட்ட எம்ஜிஆர் 56 விழுக்காட்டு வாக்குகளுடன் பெரும் வெற்றியைப் பெற்றார்.

1989ல் அதிமுக ஜெ அணி சார்பில் களமிறங்கி சேவல் சின்னத்தில் முதன்முதலாக சட்டமன்றத் தேர்தல் களம் கண்ட ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு 54 விழுக்காட்டு வாக்குகளுடன் வென்றார்.

புதிய கட்சியை உருவாக்கிய நடிகர் விஜயகாந்த் 2006 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். கூட்டணி பற்றிக் கேட்டபோது, மக்களுடனும் ஆண்டவனுடனும் மட்டுமே கூட்டணி என்று அவர் முழங்கினார். அந்தத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் 40 விழுக்காட்டு வாக்குகளுடன் அவர் வென்றார்.

ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரில் விஜயகாந்த் மட்டுமே தனியாகக் களமிறங்கினார். அவரது முதல்வர் கனவு, கனவாக இருந்து மறைந்தது.

ஆனால், பழுத்த அரசியல் அனுபவத்துடன் மக்களை நாடி வந்த எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மரணம் வரை முதல்வராக இருந்து சாதித்தார்கள்.

1977ல் எம்ஜிஆர் முதல்வர் பதவியில் அமரும்போது அவர் 25 ஆண்டு கால அரசியல் அனுபவம் பெற்றவராக இருந்தார். 1952ல் அரசியலில் குதித்த அவர், 1972ல் அதிமுகவைத் தோற்றுவித்தார்.

1991ல் ஜெயலலிதா முதல்வர் பதவியில் அமரும்போது அவருக்கு ஒன்பதாண்டு கால அரசியல் அனுபவம் இருந்தது. திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, 1982ல் அதிமுகவில் இணைந்த அவர், கொள்கை பரப்புச் செயலாளராக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அரசியல் பாடம் கற்றுத் தேறினார்.

அனுபவ அரசியல்வாதிகளாக இருந்தாலும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் முதல் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே களம் கண்டார்கள். 1977ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு களம் கண்டு முதல்வரானார் எம்ஜிஆர்.

1989ல் சேவல் சின்னத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து வென்றார். 1991ல் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டபோது காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிட்டு முதல்வரானார்.

இந்தத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்குத் தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் நின்றாலே வெற்றிபெறும் நிலையில் இரண்டிலும் வென்றால் ஜெயலலிதாவின் சாதனையை அவர் சமன் செய்வார். (1991ல் பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் நின்று இரண்டிலும் வென்றார் ஜெயலலிதா).

விஜய் வென்றாலும் அவரது கட்சி எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதுதான் பெரிய கேள்வி. தவெக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள்; தவெகவின் பலத்தை அறிவார்கள்; வெற்றிபெற அடுத்த தேர்தலைக் குறிவைப்பார்கள்; விஜய்யுடன் சேர்ந்து அரசியல் அனுபவம் பெறுவார்கள்; கூட்டணிச் சூழலை ஏற்படுத்துவார்கள்; அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் அரசாங்கத்தை அமைப்பார்கள் என்பதே, பழைய வரலாறுகளின் அடிப்படையிலான கணிப்பாக உள்ளது. -திருநா

குறிப்புச் சொற்கள்