சென்னை: கீழடி அகழாய்வு குறித்து கூடுதல் தரவுகளை மத்திய அரசு கோரியதாகவும் தமிழக அரசு இது தொடர்பாக உரிய ஆதரவை வழங்காமல் தயங்குவதாகவும் மத்திய கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சர் ஷெகாவத் கூறியுள்ளார்.
கீழடி அகழாய்வு தொடர்பான எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை என்றும் தமது சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தமிழகத்துடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால், இன்றைய அறிவியல் உலகின் இத்தகைய ஆய்வுகளை ஏற்க, இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
“அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல்பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டோம்,” என்று அமைச்சர் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தமிழ்நாடு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் இந்தியப் பாரம்பரியத்தைப் பெருமைப்படுத்த வேண்டும்,” என்றும் கஜேந்திர ஷெகாவத் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக இரு நாள்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க கூடுதலாக அறிவியல் சான்றுகள் தேவைப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசுத் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.