சென்னை: அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டையில் வந்ததையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த திங்கட்கிழமை டாஸ்மாக் முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்தனர். இதையடுத்து அவர்களில் ஏழு பேர் அன்றைய தினம் அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப் 8) பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டையில் காணப்பட்டனர். நேற்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை விமர்சித்தார்.
முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக, மக்களின் பிரச்சினையை எடுத்து சொல்ல வேண்டியது கடமை என்றார்.
“அதன்படி அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசும்போது, நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. எங்களை ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள். இப்படி ஒரு தலைப்பட்சமாக ஏன் இந்த அவை செயல்படுகிறது?” என்றும் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “அதிமுகவினர் கறுப்புச் சட்டை அணிந்ததற்காக என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவேளை காவி உடையில் வராமல் கறுப்புச் சட்டையில் வந்துள்ளனர்,” எனக் கிண்டலுடன் குறிப்பிட்டார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையிலேயே முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

