சென்னை: பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை, ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூடிய விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், வாக்காளர்களைக் கவரும் வகையில் கட்சிகள் அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.
அவ்வகையில், அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை (ஜனவரி 17) எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து, அதிமுகவின் முதற்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
சமூகத்தில் பொருளியல் சமநிலையை ஏற்படுத்தும் வகையில், குலவிளக்குத் திட்டத்தின்மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
‘அம்மா இல்லம்’ திட்டத்தின்மூலம் சொந்த வீடு இல்லாத கிராம மக்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதோர்க்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
மேலும், ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரும்.
கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள்களாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது 150 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து லட்சம் பெண்களுக்கு ரூ.25,000 மானியத்துடன் ‘அம்மா’ இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
அதிமுகவின் இந்த வாக்குறுதிகள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், திமுக இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
“திமுக ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மற்றக் கட்சிகள் வாக்குறுதிகளை அறிவிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றன,” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடினார்.
மேலும், “திமுக எப்போதும் சிந்தித்துச் செயல்படும் கட்சி. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதி தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்,” என்றும் அவர் தெரிவித்தார்.

