காலியாகும் அதிமுக கூடாரம்; தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் நால்வர்

காலியாகும் அதிமுக கூடாரம்; தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் நால்வர்

2 mins read
d3d1adbc-873b-41b0-a3ec-243151dc6d1d
(இடமிருந்து) உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், சிவபதி. - படம்: மின்னம்பலம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் தவெகவில் இணைந்துள்ளனர்.

அவர்களுடன் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் ஏழு பேரும் தவெகவில் இணைந்ததை அடுத்து, அதிமுக கூடாரம் வேகமாகக் காலியாகி வருவதால் அக்கட்சித் தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் அதிமுகவில் தொடர்ந்து சலசலப்புகள் நிலவி வருகின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, விஜய பாஸ்கர் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியது, பின்னர் வேலுமணி தரப்பினர் பழனிசாமியிடம் இணக்கமானது, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் நால்வர் தவெகவில் இணைந்தது என்று அக்கட்சியில் தொடர்ந்து குழப்பச் சூழ்நிலை காணப்பட்டது.

இந்நிலையில், அதிமுக தலைமைக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், சிவபதி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் நால்வரும் மேலும் முன்னாள் எம்எல்ஏக்களும் ஒரே நேரத்தில் வெகவில் இணைந்தனர்.

திமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஜெ. கருணாநிதியும் தவெகவில் இணைந்தார்.

சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் மற்ற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக, தவெகவுக்குத் தாவுவோர் பட்டியல் நீளமாக உள்ளது. மேலும், பிற கட்சியில் இருந்து தவெகவில் இணைவோர்க்குப் புதிய கட்சிப் பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்படும் எனத் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூறியுள்ளார்.

அதேசமயம், கட்சி மாறி வந்தவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதால் தவெகவுக்காக உழைத்தவர்கள் ஒதுக்கப்பட மாட்டார்கள் என்றும் அனைவருக்கும் முதல்வர் விஜய் நல்வாய்ப்புகளை வழங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை அடுத்து அதிமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அத்துடன் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியைத் துறந்து தவெகவில் சேர்ந்தனர்.

அடுத்த கட்டமாக மேலும் பல முக்கியப் புள்ளிகளை இணைக்கும் இரண்டாம் கட்டமாக மாபெரும் இணைப்பு விழா அடுத்த வாரம் நடைபெற இருப்பதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ராமநாதபுரம் மாவட்ட அமமுகவினர், மாவட்ட அளவில் கட்சியைக் கலைத்துவிட்டு தற்போது தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்