சென்னை: சட்டமன்றச் செயல்பாடுகளில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பது என அதிமுக சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை உடைக்க வேண்டிய எண்ணமோ நோக்கமோ தமக்கும் மற்ற எம்எல்ஏக்களுக்கும் அறவே இல்லை என்றும் அவர் திங்கட்கிழமை (மே 11) செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
“அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை; தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும் இது பொருந்தும்,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக காப்பற்றப்பட வேண்டும் என்பதில் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“தவெகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறோம். இதற்கு அனைவரும் பொறுப்பேற்கிறோம்,” என்றார் சி.வி.சண்முகம்.
அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தொண்டர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், இதற்கு ஏதுவாகக் கட்சியின் பொதுக்குழுவை விரைந்து கூட்டவேண்டும் என வலியுறுத்தினார்.
“தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், திமுக ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைப்பது குறித்துப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தபோது அதிர்ச்சி அடைந்தோம்.
“எந்தக் கட்சியை எதிர்த்து அதிமுக தொடங்கப்பட்டதோ, அதே கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை எங்களால் ஏற்க முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“தவெகவை ஆதரிக்க அதிமுக சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு.
“பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி விரைவில் கூட்டுவார் என நம்புகிறோம். பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்,” என்றார் சி.வி. சண்முகம்.


